ADDED : மார் 09, 2024 11:32 PM

இடாநகர்: அருணாச்சல பிரதேச மாநில காங்கிரஸ் தலைவரான முன்னாள் முதல்வர் நபாம் துகி, தன் பதவியை ராஜினாமா செய்தார்.
வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில், முதல்வர் பெமா காண்டு தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இந்நிலையில், காங்கிரஸ் சட்டசபை தலைவர் லோம்போ தாயெங் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் நினாங், வாங்லின் ஆகிய மூவர் சமீபத்தில் பா.ஜ.,வில் இணைந்தனர்.
லோக்சபா தேர்தல் நெருங்கும் வேளையில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வில் இணைந்தது, கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் முதல்வருமான நபாம் துகிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அவர் தன் பதவியை ராஜினாமா செய்வதாக டில்லியில் உள்ள கட்சி தலைமைக்கு கடிதம் அனுப்பினார்.
இது குறித்து, அருணாச்சல் மாநில காங்கிரஸ் பொதுச்செயலர் கியாமர் டானா கூறுகையில், “கட்சி எம்.எல்.ஏ.,க்களை வேறு கட்சியில் சேரவிடாமல் தடுக்கத் தவறியதால், தார்மீக அடிப்படையில் நபாம் துகி பதவியை ராஜினாமா செய்துள்ளார்,” என்றார்.
