புர்கா அணியாததால் ஆத்திரம்; மனைவி, இரு மகள்களை கொன்றவர் கைது
புர்கா அணியாததால் ஆத்திரம்; மனைவி, இரு மகள்களை கொன்றவர் கைது
ADDED : டிச 18, 2025 12:29 AM

ஷாம்லி: உத்தர பிரதேசத்தில், புர்கா அணியாமல் வீட்டைவிட்டு வெளியே சென்ற மனைவி மற்றும் இரு மகள்களை கொன்று, வீட்டிலேயே புதைத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
உ.பி.,யின் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள காரி தவுலத் கிராமத்தைச் சேர்ந்தவர் பரூக். இவர், மனைவி தஹிரா, மகள்கள் அப்ரீன், 12, மற்றும் செஹ்ரீன், 5, ஆகியோருடன் வசித்து வந்தார். பரூக்கின் தந்தையும் அதே பகுதியில் வசித்து வருகிறார். கடந்த வாரம், கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. பரூக்கிடம் கோபித்துக் கொண்டு, தஹிரா தாய் வீட்டிற்கு சென்றார்.
அப்போது, முஸ்லிம் பெண்கள் அணியும், தலை முதல் கால் வரையிலான உடலை மறைக்கும், 'புர்கா'வை அணியாமல், அவர் வெளியே சென்றதாக கூறப்படுகிறது. இது, பரூக்கை ஆத்திரமடைய செய்தது.
கடந்த, 10ம் தேதி வீடு திரும்பிய மனைவி தஹிராவிடம் இது குறித்து பரூக் கேள்வி எழுப்பி னார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. முடிவில், தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியால் தஹிராவை பரூக் சுட்டார். இதில், சம்பவ இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்து இறந்தார். தடுக்க வந்த மூத்த மகள் அப்ரீனையும் சுட்டதில், அவரும் உயிரிழந்தார். ஆத்திரம் அடங்காத பரூக், செஹ்ரீனை கழுத்தை நெரித்து கொன்றார்.
பின், மூவரின் உடல்களையும் வீட்டின் பின்னால் கழிப்பறை கட்ட தோண்டப்பட்ட குழியில் போட்டு புதைத்தார். மருமகள் மற்றும் பேத்தியை காணாததால், பரூக்கிடம் அவரது தந்தை கேள்வி எழுப்பினார். இதற்கு சரியாக அவர் பதிலளிக்கவில்லை.
இதையடுத்து, போலீசில் பரூக்கின் தந்தை புகாரளித்தார். அவர்கள் கேட்டபோதும், பரூக் முறையாக பதில் அளிக்கவில்லை. சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இறுதியில், மனைவி, மகள்களை கொன்று புதைத்ததை போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். பரூக்கை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

