200க்கும் மேற்பட்ட 'இண்டிகோ' விமானங்கள் ரத்து: டில்லி, மும்பையில் ஆயிரக்கணக்கானோர் தவிப்பு
200க்கும் மேற்பட்ட 'இண்டிகோ' விமானங்கள் ரத்து: டில்லி, மும்பையில் ஆயிரக்கணக்கானோர் தவிப்பு
ADDED : டிச 04, 2025 12:28 AM

புதுடில்லி: 'இண்டிகோ' விமான நிறுவனம், ஊழியர்கள் பற்றாக்குறையை எதிர்கொள்வதால், நாடு முழுதும் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் நேற்று மதியம் வரை, 200க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
அனைத்து விமான நிறுவனங்களுக்கும், எப்.டி.டி.எல்., எனப்படும் விமான பணி நேர கட்டுப்பாடு விதிகள் நவம்பர் 1 முதல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளன.
இந்த விதிப்படி விமானி மற்றும் விமானத்தின் பிற ஊழியர்களுக்கு வாரத்திற்கு, 48 மணி நேர ஓய்வு வழங்க வேண்டும். இரவில் இரண்டு முறை மட்டுமே ஒரு விமானி தரையிறங்க அனுமதி, முன்னர் இது ஆறு முறையாக இருந்தது.
பற்றாக்குறை
இந்த விதிகள், விமான நிறுவனத்தின் செயல்பாடுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு, 'இண்டிகோ' மற்றும் 'ஏர் இந்தியா' எதிர்ப்பு தெரிவித்த போதும், டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவின்படி டி.ஜி.சி.ஏ., எனப்படும் விமான போக்குவரத்து இயக்குனரகம் இவற்றை கட்டாயமாக்கியது.
இண்டிகோ நிறுவனம் நாள்தோறும் 2,100 விமான சேவைகள் வரை இயக்குகிறது. இதில் பெரும்பாலானவை இரவு நேர சேவைகள்.
எனவே, கடும் ஊழியர்கள் பற்றாக்குறையை நிறுவனம் எதிர்கொண்டு உள்ளது.
நேற்று மதியம் வரை, டில்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில், 200-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
கடந்த ஒரு வாரமாக, இண்டிகோ விமானங்களில், ஒன்று முதல் மூன்று மணி நேரம் வரை தாமதம் ஏற்பட்டதாக பயணியர் புகார் தெரி வித்துள்ளனர்.
இண்டிகோவின் 35 சதவீத விமானங்கள் மட்டுமே குறித்த நேரத்தில் செயல்படுவதாக நேற்று முன்தினம் வெளியான புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. கடந்த 1ம் தேதி இது 49.5 சதவீதமாக இருந்தது.
இது குறித்து, அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
எங்களின் விமான சேவைகள் கடந்த இரண்டு நாட்களாக எதிர்பாராத சவால்கள் காரணமாக தடங்கல்களை சந்திக்கின்றன.
விரைவில் சீரடையும்
விமான பணி நேர கட்டுப்பாடு விதிகள், தொழில்நுட்ப கோளாறுகள், குளிர்கால வானிலை ஆகியவற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பயணியர் சந்தித்துள்ள சிரமத்திற்கு மன்னிப்பு கோருகிறோம். நிலைமை விரைவில் சீரடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது தவிர, 'ஸ்பைஸ் ஜெட், ஆகாசா ஏர்' மற்றும் 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' உள்ளிட்ட விமான நிறுவனங்களின் புறப்பாடு மற்றும் வருகை, கணினியின் மென்பொருள் கோளாறு காரணமாக நேற்று தாமதமானது.
'மைக்ரோசாப்ட் விண்டோஸ்' மென்பொருள் சர்வதேச அளவில் முடங்கியது. இதனால், விமான நிலையங்களில் 'செக் இன்' மற்றும் ஐ.டி., சேவைகள் பாதிக்கப்பட்டன' என்ற தகவலை பயணியருக்கு வாரணாசி விமான நிலையம் வழங்கியுள்ளது.

