நாடு முழுதும் 2023ல் மட்டும் உபா சட்டத்தில் 2,900 பேர் கைது; அதிகபட்ச கைது ஜம்மு காஷ்மீரில் தான்
நாடு முழுதும் 2023ல் மட்டும் உபா சட்டத்தில் 2,900 பேர் கைது; அதிகபட்ச கைது ஜம்மு காஷ்மீரில் தான்
ADDED : டிச 03, 2025 07:56 AM

புதுடில்லி: தேசிய விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது பாயும் உபா சட்டத்தின் கீழ், கடந்த 2023ம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 2,900 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 42 சதவீதம் பேர் ஜம்மு காஷ்மீரில் தான் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பயங்கரவாத செயல்கள் மற்றும் அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உபா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில், கடந்த 2023ம் ஆண்டில் மட்டும் உபா சட்டத்தின் கீழ் 2,900 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக லோக் சபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பாலக்காடு காங்கிரஸ் எம்பி ஷாபி பரம்பில் எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்தா ராய் பதிலளித்ததாவது: 2023ம் ஆண்டில் நாடு முழுவதும் 2,914 பேர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 1,206 பேர், அதாவது 42 சதவீதம் பேர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர்கள்.
2022ல் 1,238 பேர் கைது செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீருக்கு அடுத்தபடியாக உத்தர பிரதேசம் 1,122 கைதுகளுடன் 2வது இடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் 2022ல் 503 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அது இரட்டிப்பாகி உள்ளது.
2023ல் டில்லியில் 22 பேரும், 28 மாநிலங்களில் 1,686 பேரும், 7 யூனியன் பிரதேசங்களில் 1,228 பேரும் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். யூனியன் பிரதேசங்களின் கைது எண்ணிக்கையின் மொத்த சதவீத்தில் இருந்து ஜம்மு காஷ்மீரில் மட்டும் 98 சதவீதம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத் (NCRB) தரவுகளின் அடிப்படையில் இந்த புள்ளி விபரங்கள் வழங்கப்பட்டுள்ளன. உபா வழக்கில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து மாநில வாரியான தரவுகள் ஏதும் இல்லை, இவ்வாறு அவர் கூறினார்.

