உண்மையை உரக்கப் பேசிய ஓவைசி! நெத்தியடி பேச்சுக்கு 'நெட்டிசன்'கள் புகழாரம்
உண்மையை உரக்கப் பேசிய ஓவைசி! நெத்தியடி பேச்சுக்கு 'நெட்டிசன்'கள் புகழாரம்
ADDED : ஏப் 26, 2025 07:19 AM

அசாதுதீன் ஓவைசி என்ற பெயரை கேட்டாலே, இவர் ஆளுங்கட்சிக்கு எதிரானவர், மதசார்பு கொள்கை கொண்டவர் என்ற கருத்து நிலவுகிறது. ஆல் இந்தியா மஜ்லிஸ்-இ-இத்தகுதுல் முஸ்லிமீன் (ஏ.ஐ.எம்.ஐ.எம்.,) தலைவரான ஓவைசி சர்ச்சை பேச்சுகளுக்கு பெயர்போனவர்.
ஆனால், இவர் காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து, உண்மை தகவலை விருப்பு, வெறுப்பின்றி பகிரங்கமாக வெளிப்படுத்தி உள்ளார். இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் தான் உள்ளது என்பதை அவர் துணிச்சலுடன் உரக்கக்கூறியுள்ளார்.
மதசார்பற்ற கட்சித் தலைவர்கள் என கூறிக்கொள்ளும், காங்கிரஸ் எம்.பி., ராகுல், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூட, காஷ்மீர் தாக்குதல் விவகாரத்தில் வார்த்தைகளை அளந்து பேசி வருகின்றனர். ஆனால், ஓவைசி மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு உண்மை நிலவரத்தை பேசியுள்ளதால், சமூகவலைதளவாசிகள் அவரை கொண்டாடுகின்றனர்.
நீதி வேண்டும்
பஹல்காம் தாக்குதல் குறித்து ஓவைசி கூறியதாவது: காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு மக்களிடம் மன்னிப்பு கூற வேண்டும். சுற்றுலா பயணியரின் பெயர்களைக் கேட்ட பின், அவர்களின் மதம் என்ன என அறிந்தபின், ஈவிரக்கமின்றி சுட்டுக்கொன்றுள்ளனர். இதற்கு அவர்கள் பொறுப்புக்கூற வேண்டும்.
அவர்கள் பாகிஸ்தானிலிருந்து வந்தவர்கள் என்பதில் சந்தேகமில்லை. பாகிஸ்தான் அரசு, ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பின் ஆதரவு உள்ளது. படுபாதக செயலை செய்த இந்த அயோக்கியர்கள், கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
ஈன செயல்
இவர்கள் எல்லை தாண்டி எப்படி வந்தார்கள்? இதற்கு யார் பொறுப்பு? பஹல்காம் வந்தவர்கள், ஸ்ரீநகருக்கும் வந்திருப்பார்கள். இவர்கள் பொறுப்பற்ற செயலுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். பயங்கரவாதிகளின் இந்த ஈன செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்ததை வரவேற்கிறேன். இது ஒரு அரசியல் விவகாரம் அல்ல. அதனால், மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும், அதை ஆதரிப்போம்.
முழு ஆதரவு
பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் எந்த நாட்டின் மீதும் நடவடிக்கை எடுக்க, மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளிப்போம். நமது நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பாகிஸ்தானுக்கு எதிராக, வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல் நடத்தலாம். இதுபோன்ற ராணுவ நடவடிக்கை எடுக்க சர்வதேச சட்டங்களும் அனுமதிக்கின்றன. இவ்வாறு, ஓவைசி கூறியுள்ளார்.