செல்ல நாயை திட்டிய நபரின் மூக்கை அறுத்த உரிமையாளர்
செல்ல நாயை திட்டிய நபரின் மூக்கை அறுத்த உரிமையாளர்
ADDED : ஜூலை 19, 2025 06:16 AM

நொய்டா : உத்தர பிரதேசத்தின் நொய்டாவில், தன் வளர்ப்பு நாயை திட்டிய நபரின் மூக்கை அறுத்த நாயின் உரிமையாளர் மற்றும் அவரது சகோதரர் கைது செய்யப்பட்டனர்.
உ.பி.,யின் நொய்டாவில் உள்ள நாட் கி மாதாயா என்ற கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரா.
கடந்த 8ம் தேதி தேவேந்திரா வீட்டில் இருந்த போது பக்கத்து வீட்டை சேர்ந்த சதீஷ் என்பவரின் வளர்ப்பு நாய் குரைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தேவேந்திரா அந்த நாயை திட்டி விரட்டியடித்துள்ளார்.
இதை பார்த்த நாயின் உரிமையாளர் சதீஷ், அவரது சகோதரர் அமித் மற்றும் துஷார் என்பவருடன் சேர்ந்து தேவேந்திரா வீட்டுக்கு சென்று அவரையும் முன்னி தேவியையும் சரமாரியாக அடித்துள்ளனர்.
மேலும் கூர்மையான ஆயுதத்தால் தேவேந்திராவின் மூக்கை அறுத்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் அலிகார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூக்கில் தையல் போடப்பட்டது.
இதையடுத்து சதீஷ் உட்பட மூவரும் தலைமறைவாகினர். இது தொடர்பாக தேவேந்திரா அளித்த புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ் மற்றும் அமித்தை கைது செய்தனர். துஷாரை தேடி வருகின்றனர்.