ஏப்., 1 முதல் நடைமுறைக்கு வரும் பேக்கிங் விதிகள்
ஏப்., 1 முதல் நடைமுறைக்கு வரும் பேக்கிங் விதிகள்
ADDED : மார் 30, 2026 01:27 AM
புதுடில்லி: பயோ பெர்ட்டிலைஸர் என்றழைக்கப்படும் உயிர் உரங்களுக்கு ஒரே மாதிரியான பேக்கேஜிங் முறையை கொண்டு வரும் நோக்கில் மத்திய வேளாண் அமைச்சகம் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மத்திய வேளாண் துறை தெரிவித்துள்ளதாவது:
உர கட்டுப்பாட்டு ஆணை 1985ன் கீழ் ரசாயன உரம், இயற்கை உரம், கலப்பு உரங்கள் ஆகியவற்றின் பேக்கேஜிங் முறைகளை ஒரே மாதிரியாக்கவும், ஒரு ஒழுங்குமுறைக்குள் கொண்டு வரவும் புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி அனுமதிக்கப்பட்ட அளவுகளில்தான் உயிர் உரங்களை பேக்கிங் செய்து விற்பனைக்கு அனுப்ப வேண்டும்.
இதன் வாயிலாக, உயிர் உர தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் விவசாயிகள் என அனைத்து தரப்பினருக்கும் உரத்தின் தரம் மற்றும் அளவு குறித்தான தெளிவு கிடைக்கும். வேகமாக வளர்ந்து வரும் உயிர் உர சந்தையில் இந்த புதிய விதிமுறைகள் உரங்களை கண்காணிக்கவும், வினியோகிக்கவும் உதவியாக இருக்கும். குறிப்பாக உயிர் உர தயாரிப்பாளர்களுக்கு இது உதவும்.
வரும் ஏப்ரல் 1 முதல் இந்த புதிய பேக்கேஜிங் விதிமுறைகள் நடைமுறைக்கு வரும். இந்த அறிவிப்பு வெளியான தேதிக்கு முன்பு பேக்கிங் செய்யப்பட்டுள்ள உரங்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தாது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
