'மூடா' வழக்கில் முதல்வர் சித்துவை எதிர்த்து பாதயாத்திரை துவங்கியது!
'மூடா' வழக்கில் முதல்வர் சித்துவை எதிர்த்து பாதயாத்திரை துவங்கியது!
ADDED : ஆக 03, 2024 11:10 PM

பெங்களூரு: 'மூடா' முறைகேடு வழக்கில் முதல்வர் சித்தராமையாவை ராஜினாமா செய்ய வலியுறுத்தி, பெங்களூரில் இருந்து மைசூரு வரையிலான பாதயாத்திரையை, பா.ஜ., - ம.ஜ.த.,வினர் நேற்று துவங்கினர். இரண்டு கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்று, தொண்டர்களை உற்சாகப்படுத்தினர்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இவரது மனைவி பார்வதிக்கு, 'மூடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம், 14 மனைகளை ஒதுக்கியது.
இது முறைகேடாக ஒதுக்கப்பட்டதாக பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர் ஆபிரஹாம் ஆகியோர் கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் புகார் அளித்தனர்.
அமைச்சரவை தீர்மானம்
சமூக ஆர்வலர் அளித்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புப் பிரிவின் கீழ் தங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி, முதல்வருக்கு, கவர்னர் நோட்டீஸ் வழங்கினார்.
இந்த நோட்டீசை திரும்பப் பெறும்படி, கர்நாடக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. இதனால் மூடா விவகாரம் சூடுபிடித்தது.
இந்த முறைகேடுக்குப் பொறுப்பேற்று, முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய வலியுறுத்தி, பா.ஜ., - ம.ஜ.த.,வினர் பெங்களூரில் இருந்து மைசூரு வரை பாதயாத்திரை செல்ல முடிவு செய்தனர்.
முரசு கொட்டி
அதன்படி, பெங்களூரு கெம்பம்மா கோவிலில் இரு கட்சித் தலைவர்களும் நேற்று காலை பூஜை செய்தனர்.
பின், அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான மேடையில், பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா, ம.ஜ.த., மாநில தலைவரும், மத்திய கனரக தொழிற்சாலைகள் துறை அமைச்சருமான குமாரசாமி ஆகிய இருவரும் முரசு கொட்டி, பாதயாத்திரையைத் துவக்கிவைத்தனர்.
மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் ஜோஷி, சோமண்ணா, ஷோபா, மேலிட பொறுப்பாளர் ராதாமோகன் தாஸ், பா.ஜ., மாநிலத் தலைவர் விஜயேந்திரா, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக், மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணசாமி, மாநில ம.ஜ.த., இளைஞர் அணி தலைவர் நிகில் குமாரசாமி, ம.ஜ.த., முக்கிய முடிவுகளை எடுக்கும் கோர் கமிட்டி குழுத் தலைவர் ஜி.டி.தேவகவுடா உட்பட இரண்டு கட்சிகளின் முக்கியத் தலைவர்கள், ஏராளமான தொண்டர்கள், பாதயாத்திரையில் பங்கேற்றனர்.
ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்குள் நுழையும்போது, அந்தந்த தொகுதியின் இரண்டு கட்சிப் பிரமுகர்கள், தலைவர்களுக்கு பிரமாண்டமான மாலைகள் அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வழி நெடுகிலும் கர்நாடக நாட்டுப்புற கலைஞர்கள் நடனமாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தினர். முதல்வருக்கு எதிராகவும், காங்கிரஸ் அரசை கண்டித்தும் பதாகைகளை கைகளில் ஏந்திக் கொண்டு, கோஷங்கள் எழுப்பியவாறு நடந்தனர்.
முதல் நாள் முடிவு
வழியில் இருந்த கடைகள் மற்றும் நடந்து செல்வோரிடம், காங்கிரஸ் அரசின் மூடா, வால்மீகி, எஸ்.சி., - எஸ்.டி., நிதி முறைகேடுகள் கொண்ட கையேடுகளை வழங்கி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மதியம் 2:00 மணியளவில், பிடதியின் லட்சுமிசாகர் அருகில் மதிய உணவு சாப்பிட்டனர்.
கெங்கேரியில் இருந்து, 16 கி.மீ., நடந்து, பிடதியில் மாலை 6:50 மணிக்கு பாதயாத்திரை முதல் நாளை நிறைவு செய்தது.
இரவு, அங்குள்ள மஞ்சுநாதா கன்வென்சன் அரங்கில் தொண்டர்கள் தங்க வைக்கப்படட்டனர்.
இட பற்றாக்குறையால் பிரமுகர்கள், தலைவர்கள் அருகில் உள்ள வெவ்வேறு திருமண மண்டபங்களில் தங்கினர். இங்கிருந்து, இன்று காலை 10:00 மணிக்கு, 2வது நாள் பாதயாத்திரை துவங்குகிறது. வரும் 10ம் தேதி மைசூரில் பாதயாத்திரை நிறைவடையும்.
பலத்த பாதுகாப்பு
பெங்களூரு - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஒரு வழிப்பாதையில் திருப்பி விடப்பட்டதால், வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் நின்று அவதிப்பட்டனர்.
பாதயாத்திரைக்கு சட்டப்படி முழு பாதுகாப்பு வழங்கும்படி, கர்நாடக உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டுஇருந்தது.
இதனால், வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அந்த மாவட்ட எஸ்.பி.,யின் நேரடி கண்காணிப்பில் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பாரம்பரிய வாத்தியம் முழங்கப்பட்டது.
காங்கிரஸ் அரசால்
மிதிக்கப்பட்ட ஏழைகள், ஒடுக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க செய்வதற்காகவே
இந்த பாதயாத்திரை நடத்தப்படுகிறது. முதல்வர் ராஜினாமா செய்யும் வரை எங்கள்
போராட்டம் தொடரும். காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் தாண்டவமாடுகிறது.
- விஜயேந்திரா, மாநில தலைவர், பா.ஜ.,
மூடாவில்,
4,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. சட்டசபையில்
ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ் விவாதிக்க ஒப்புக்கொள்ளவில்லை. தலித்
நபரின் நிலத்தை, முதல்வர் விழுங்கி உள்ளார். அவர் தவறு செய்யவில்லை என்றால்
கவர்னர் நோட்டீசுக்கு ஏன் நடுங்குகின்றனர்.
- அசோக், எதிர்க்கட்சித் தலைவர், கர்நாடக சட்டசபை