அறுவடை நேரத்தில் தண்ணீரில் மூழ்கி 3000 ஏக்கரில் நெற்கதிர்கள் பாதிப்பு
அறுவடை நேரத்தில் தண்ணீரில் மூழ்கி 3000 ஏக்கரில் நெற்கதிர்கள் பாதிப்பு
ADDED : ஜன 17, 2026 05:36 AM

விவசாயிகள் கண்ணீர்
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஊரணங்குடி, உப்பூர் குரூப் பகுதிகளில் அறுவடை நேரத்தில் பெய்த மழையால் 3000 ஏக்கரில் நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் பாதிப்படைப்புள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரம் ஊரணங்குடி, உப்பூர் குரூப்களுக்கு உட்பட்ட வடக்கு ஊரணங்குடி, தெற்கு ஊரணங்குடி, உப்பூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் 6000 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது மகசூல் நிலையை எட்டி யுள்ளன.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் பெய்த கன மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெல் வயல்களில் முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளதுடன், மழைநீரை வெளியேற்ற வழி இல்லாததால் 3000 ஏக்கரில் நெற்கதிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.
மூழ்கிய நெற்கதிர்கள் மீண்டும் முளைத்து வருகின்றன.
அறுவடை இயந்திரங்களும் வயல்களில் இறங்கி அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளதால் விளைந்த நெற்கதிர்கள் அனைத்தும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலி யுறுத்தி உள்ளனர்.
அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி லுாயிஸ் இளமாறன் கூறுகையில், ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை செலவு செய்து நெல் விவசாயம் செய்துள்ளோம்.
இன்னும் சில தினங்களில் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் மழையால் நெற்கதிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி பாதிப்படைந்து வருகின்றன.
இந்நிலையில் அறுவடை செய்தாலும், செலவு செய்த தொகையை கூட எடுக்க முடியாத நிலை உள்ளதால் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
