ADDED : ஜன 26, 2024 07:13 AM

பெங்களூரு; கர்நாடகாவின் இருவருக்கு மத்திய அரசு நேற்று பத்மஸ்ரீ விருது அறிவித்தது.
குடியரசு தினத்தை ஒட்டி, ஆண்டுதோறும் கலை, இலக்கியம், மருத்துவம், சமூக சேவை, விவசாயம், கல்வி ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, மத்திய அரசு பத்ம விருதுகள் அறிவிக்கும்.
அந்த வகையில், வெவ்வேறு துறைகளில் சாதனை படைத்த, நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தோருக்கு நேற்று பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், கர்நாடகாவின் சோமண்ணா, பிரேமா தன்ராஜ் ஆகிய இருவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சோமண்ணா, 66, மைசூரை சேர்ந்த மலைவாழ் தொழிலாளி. ஜேனு குருபா எனும் மலை தேன் எடுக்கும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக, 40 ஆண்டுகளாக உழைத்தவர். பல ஆண்டுகளாக தொடர்ந்து இயற்கை வளங்களை பாதுகாத்து வருகிறார்.
இதுபோன்று, ஒரு தீ விபத்தில் தன் முகத்துக்கு பாதிப்பு ஏற்பட்ட பிரேமா தன்ராஜ், 72, பலருக்கு உதவி வருகிறார். இலவசமாக 25 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை செய்துள்ளார். அக்னி ரக் ஷா என்ற தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார்.
போலீஸ் பதக்கம்
குடியரசு தினத்தை ஒட்டி, ஜனாதிபதியின் தகைசால் பதக்கம், கர்நாடக கூடுதல் டி.ஜி.பி., சவுமேந்து முகர்ஜிக்கும்; சிறந்த சேவை பதக்கம், பெங்களூரு கிழக்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் ரமண் குப்தாவுக்கும் மத்திய உள்துறை நேற்று அறிவித்தது. இது போன்று, மேலும் 18 போலீசாருக்கு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

