மாஜி நீச்சல் வீராங்கனையின் பத்மஸ்ரீ விருது திருட்டு: வீடு புகுந்து மர்ம நபர்கள் கைவரிசை
மாஜி நீச்சல் வீராங்கனையின் பத்மஸ்ரீ விருது திருட்டு: வீடு புகுந்து மர்ம நபர்கள் கைவரிசை
ADDED : ஆக 16, 2025 01:01 PM

கோல்கட்டா: பத்மஸ்ரீ விருது வென்ற முன்னாள் நீச்சல் வீராங்கனை வீட்டில் இருந்த பதக்கங்கள், நினைவுப் பரிசுகள் திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல இந்திய நீச்சல் வீராங்கனை புலா சவுத்ரி. இவர் 5 கண்டங்களில் உள்ள 7 கடல்களையும் நீந்தி கடந்தவர் என்ற பெருமையையும், சாதனையையும் படைத்தவர். இவரது சாதனைகளை பாராட்டி, மத்திய அரசு அர்ஜூனா விருது, பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது. 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை மேற்கு வங்க மாநிலம், நந்தப்பூர் எம்எல்ஏவாக இருந்துள்ளார்,
தற்போது கோல்கட்டாவில் உள்ள கஸ்பா பகுதியில் புலா சவுத்ரியில் மூதாதையர் வீடு உள்ளது. இந்த வீட்டை அவரது சகோதரர் மிலன் சவுத்ரி என்பவர் கவனித்து வருகிறார்.
இந் நிலையில், சுதந்திர தினத்தன்று புலா சவுத்ரியின் யோசனையின் பேரில், மிலன் சவுத்ரி அந்த வீட்டை சுத்தம் செய்ய சென்றுள்ளார். வீட்டின் உள்ளே நுழைந்த போது, பின்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. வீட்டில் இருந்த புலா சவுத்ரியின் ஏராளமான பதக்கங்கள், நினைவுப்பரிசுகள் திருடு போனது.
அங்கே வைத்திருந்த 6 தங்கப்பதக்கங்கள், பத்மஸ்ரீ விருது என அனைத்து பரிசுகளையும் அள்ளி மர்ம நபர்கள், அர்ஜூனா விருது, டென்சிங் நோர்கே பதக்கத்தை விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். கொள்ளை சம்பவத்தை அறிந்த புலா சவுத்ரி, உடனடியாக போலீசில் புகார் அளித்தார்.
இதுகுறித்து புலா சவுத்ரி கூறியிருப்பதாவது;
தனது வாழ்நாளில் நான் வென்ற பதக்கங்கள், நினைவு பொருட்கள் அனைத்தையும் திருடிச் சென்றுவிட்டனர். எதற்காக அவற்றை கொள்ளையடிக்கின்றனர். அதன் மூலம் எந்த பணமும் கிடைக்காது. அளவில் சிறியதாக இருந்ததால் அர்ஜூனா விருதை அவர்கள் விட்டுச் சென்றுவிட்டனர் என நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
புலா சவுத்ரி அளித்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது, புலா சவுத்ரி வீட்டில் நிகழ்ந்த 3வது திருட்டு சம்பவம் ஆகும்.

