பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: பயங்கரவாதி ஹபீஸ் சயீதுக்கு பிடிவாரண்ட்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: பயங்கரவாதி ஹபீஸ் சயீதுக்கு பிடிவாரண்ட்
ADDED : ஜூலை 14, 2026 04:51 PM

ஸ்ரீநகர்:பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீதுக்கு எதிராக ஜாமினில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட்டை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், 2025 ஏப்., 22ல் பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான, 'தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்' பொறுப்பேற்றது. இந்த வழக்கை விசாரித்த என்.ஐ.ஏ., கடந்த ஆண்டு டிசம்பரில், ஜம்முவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், 1,597 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் ஜம்முவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகையை என்.ஐ.ஏ., தாக்கல் செய்தது. அதில், லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் தலைவனான சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சயீத் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளான் . அவன் மீது, 'உபா' எனப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் உட்பட பல பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ஹபீஸ் சயீதுக்கு எதிராக ஜாமினில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட்டை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இந்தியா மற்றும் அமெரிக்காவால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட இவன், கடந்த 2008 ம் ஆண்டுமும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவன் ஆவான்.
