பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; ஜிப் லைன் ஆப்ரேட்டர் முசாமில் அகமதுவிடம் என்.ஐ.ஏ., விசாரணை!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; ஜிப் லைன் ஆப்ரேட்டர் முசாமில் அகமதுவிடம் என்.ஐ.ஏ., விசாரணை!
ADDED : ஏப் 30, 2025 11:03 AM

புதுடில்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, ஜிப்லைன் ஆபரேட்டர் முசாமில் அகமது கும்ஹர் இடம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஷ்மீர் மாநிலம், பஹல்காமில், பைசரன் பள்ளத்தாக்கில் உள்ள, 'ஜிப் லைன்' எனப்படும், கம்பியில் தொங்கிச் செல்லும் விளையாட்டை நடத்தி வரும் முசாமில், மூன்று முறை மத கோஷம் எழுப்பிய பிறகே துப்பாக்கிச் சூடு நடந்ததாக சுற்றுலா பயணி ஒருவர் தெரிவித்தார். அதை அவர் படமாக்கி உள்ளார்.
ஆனால், 'ஆபத்தான நேரத்தில் இதுபோல் மத கோஷம் எழுப்புவது வழக்கமானது தான்' என, முசாமில் தந்தை கூறியுள்ளார். இது தொடர்பாக ஜிப் லைன் ஆப்பரேட்டர் முசாமில் அகமது கும்ஹர் இடம் என்.ஐ.ஏ,. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அவர் விசாரணையின் போது, பயங்கரவாத தொடர்புகளை திட்டவட்டமாக மறுத்துவிட்டார். மேலும், தாக்குதல் நடந்த தினத்தில், அங்கிருந்த சிற்றுண்டி கடைகளுக்கு பின் பகுதியில், பயங்கரவாதிகள் முன்கூட்டியே வந்து அமர்ந்திருந்ததாக, நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து ஆங்கில செய்தி சேனலுக்கு ஜிப்லைன் ஆபரேட்டர் முசாமில் தந்தை அப்துல் அஜீஸ் கூறியதாவது: 'அல்லாஹு அக்பர்' என்பது பயங்கரவாதிகளுக்கான முழக்கம் இல்லை. நான் அந்த வீடியோவைப் பார்க்கவில்லை. ஆனால், நாங்கள் புயல் வந்தாலும் கூட 'அல்லாஹு அக்பர்' என்று கூறுவோம்.
சுற்றுலாப் பயணிகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அவன் 'அல்லாஹு அக்பர்' எனக் கூறியிருப்பான். அவன் நிஜமாகவே வேலை செய்து நேர்மையாகப் பணம் சம்பாதிக்கவே அங்கு வேலை பார்த்தான். இவ்வாறு அவர் கூறினார்.