உயிர்த்தியாகம் செய்த குதிரை சவாரி தொழிலாளி: இறுதிச்சடங்கில் ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி!
உயிர்த்தியாகம் செய்த குதிரை சவாரி தொழிலாளி: இறுதிச்சடங்கில் ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி!
ADDED : ஏப் 24, 2025 01:13 PM

ஸ்ரீநகர்: காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில், பயங்கரவாதிகளுடன் போராடி உயிர் தியாகம் செய்த குதிரை சவாரி தொழிலாளி அடில் ஹூசைன் ஷா உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
பஹல்காமில், பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில், சுற்றுலா பயணியர் மீது பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். அப்போது, அப்பகுதியில் இருந்த குதிரை சவாரி தொழிலாளியான, உள்ளூரைச் சேர்ந்த சையது அடில் ஹுசைன் ஷா என்பவர், துணிச்சலாக பயங்கரவாதிகளிடம் சண்டையிட்டு துப்பாக்கிகளை பறிக்க முயன்றார்.
ஆனால் அவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். சுற்றுலா பயணியரை தவிர்த்து கொல்லப்பட்ட ஒரே உள்ளூர் நபர் இவர் தான். தன் உயிரையும் பொருட்படுத்தாமல், சுற்றுலா பயணியரின் உயிரை பாதுகாக்க நினைத்த அவருக்கு, நாட்டு மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அடில் ஹூசைன் ஷா உடல் அடக்கம் ஏராளமானோர் முன்னிலையில் நடந்தது. ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா நேரில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார். அடில் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
உயிரிழந்த குதிரை சவாரி தொழிலாளியின் தந்தை சையத் ஹைதர் ஷா நிருபர்களிடம் கூறியதாவது: இது மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆனால் நாம் என்ன செய்ய முடியும். நாங்கள் சோகமாக இருக்கிறோம்.
குதிரை சவாரி தொழிலாளிகள் ஒரு பயணத்திற்கு ரூ. 200 முதல் 300 வரை சம்பாதிக்கிறார்கள். மகன் அடில் மலையேறும் போது சம்பவம் நடந்தது. இவ்வாறு சையத் ஹைதர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

