ஜக்கூர்: குடும்ப மானத்துக்கு பயந்து, பெயிண்டர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரின் ஜக்கூர் அருகில் வசித்தவர் மோகன் குமார், 45. இவர் பெயின்டிங் வேலை செய்கிறார்.
இவரது மனைவி, ஆயத்த ஆடை தொழிற்சாலையில் வேலை செய்கிறார். எந்த பிரச்னைகளும் இல்லாமல் மனைவி, குழந்தைகளுடன் நிம்மதியாக வாழ்ந்தார்.
மோகன்குமாரின் மைத்துனர் நிதின், 30, வி.வி.புரத்தில் வசிக்கிறார். இவர், ஒரு தொழிலதிபர் வீட்டில், தங்கநகைகளை திருடினார்.
இவற்றை, தன் மாமா மோகன்குமாரின் வீட்டில் ரகசியமாக பதுக்கி வைத்திருந்தார். இவருக்கு இது பற்றி தெரியாது.
இதற்கிடையில், தொழிலதிபர் அளித்த புகாரின்படி, விசாரணை நடத்திய வி.வி.புரம் போலீசார், நிதினை கண்டுபிடித்து கைது செய்தனர். நகைகளை பற்றி விசாரித்த போது, தன் மாமாவின் வீட்டில் பதுக்கி வைத்துள்ளதை கூறினார். போலீசார், மோகன்குமாரின் வீட்டில் சோதனையிட்டு நகைகளை பறிமுதல் செய்தனர்.
அவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று, விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த தொழிலதிபர், 'இன்னும் சில நகைகளை, திருப்பி கொடுக்க வேண்டும்.
இல்லையென்றால் சும்மாவிடமாட்டேன்' என மிரட்டினார். அவ்வப்போது தொலைபேசியில் தொடர்பு கொண்டும் மிரட்டினார்.
திருட்டு நகைகள் தன் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டதால், குடும்ப மானம் பறிபோனதாக மோகன் குமார் மனம் நொந்தார்.
தன் மீது திருட்டு பழியும் விழுந்ததால், விரக்தி அடைந்த அவர் ஜக்கூர் அருகில் உள்ள காலியிடத்தில், நேற்று முன் தினம் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.
அம்ருதஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

