பாக்., - வங்கதேச ஹிந்துக்கள் நம் நாட்டில் வாழ உரிமை உள்ளது!: வரலாற்று பிழையை திருத்தவே குடியுரிமை சட்டம்: அமித் ஷா திட்டவட்டம்
பாக்., - வங்கதேச ஹிந்துக்கள் நம் நாட்டில் வாழ உரிமை உள்ளது!: வரலாற்று பிழையை திருத்தவே குடியுரிமை சட்டம்: அமித் ஷா திட்டவட்டம்
ADDED : அக் 12, 2025 12:15 AM

புதுடில்லி: ''தேசப் பிரிவினையின்போது ஏற்பட்ட வரலாற்று பிழையை திருத்தவே, குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருக்கும் ஹிந்துக்களுக்கு இந்திய மண்ணின் மீது முழு உரிமை இருக்கிறது. அங்கிருந்து ஊடுருவி வந்தவர்களால் நம் நாட்டில் முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்து விட்டது,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டில்லியில் நேற்று முன்தினம் நடந்த, 'ஜாக்ரன் சாஹித்ய ஸ்ரீஜன் சம்மான்' நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பேசியதாவது:
கடந்த, 1951 முதல், 2011 வரை எடுக்கப்பட்ட தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளை ஒப்பிட்டு பார்த்ததில், குறிப்பிடத்தக்க அளவுக்கு மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது.
கடந்த, 1951ல் நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில், ஹிந்துக்களின் எண்ணிக்கை, 84 சதவீதமாக இருந்தது. அதுவே, 2011ல் கணிசமாக சரிந்து, 79 சதவீதமாக பதிவாகி இருக்கிறது.
ஊடுருவல் அப்போது, 9.8 சதவீதமாக இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை, இப்போது, 14.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதாவது, 2011 புள்ளி விபரங்களின்படி முஸ்லிம் மக்கள் தொகையின் வளர்ச்சி விகிதம், 24.6 சதவீதம் உயர்ந்துஉள்ளது.
ஆனால், இது இயற்கையான உயர்வு அல்ல. அண்டை நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நுழைந்தவர்களால் ஏற்பட்ட திடீர் உயர்வு.
வங்கதேசத்தின் எல்லை யில் உள்ள நம் மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் முஸ்லிம் மக்கள் தொகையின் வளர்ச்சி விகிதம், 40 சதவீதம் என்ற ரீதியில் இருக்கிறது.
சில நேரங்களில், 70 சதவீத அளவுக்கு கூட உயர்ந்து இருக்கிறது. அளவுக்கு அதிகமான ஊடுருவலே இதற்கு காரணம் என்பதை யாராலும் நிச்சயம் மறுக்க முடியாது.
மத ரீதியாக, 1947ல் தேசம் துண்டாடப்பட்ட போது, புதிதாக உருவான முஸ்லிம் நாடுகளுக்கு சென்ற ஹிந்து, சீக்கியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்களை பாதுகாக்கும் தார்மீக பொறுப்பு நம் நாட்டிற்கு இருக்கிறது.
முஸ்லிம் நாடுகளில் சிறுபான்மையின மக்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு இன்றும் ஆளாகி வருகின்றனர். அதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. 1951ல் பாகிஸ்தானில் ஹிந்துக்களின் மக்கள் தொகை, 13 சதவீதமாக இருந்தது. ஆனால், இப்போதோ 2 சதவீதம் கூட இல்லை.
வங்கதேசத்திலும், 22 சதவீதத்தில் இருந்து, 8 சதவீதமாக ஹிந்துக்களின் மக்கள் தொகை சரிந்து விட்டது.
உரிமை எனவே, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் வாழும் ஹிந்துக்களுக்கு இன்றும் நம் மண்ணில், அதே உரிமை இருக்கிறது. தேசப் பிரிவினையின் போது ஏற்பட்ட வரலாற்று பிழையை திருத்தவே குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன் மூலம் அண்டை நாடுகளில் சிறுபான்மையின மக்களாக வசிக்கும் ஹிந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிக்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு நம் நாட்டின் குடியுரிமை வழங்கவே இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
தர்மசத்திரம் பொருளாதாரம் மற்ற பிற காரணங்களுக்காக நம் நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது. ஏனெனில், அனைவருக்கும் இடம் தர இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் அல்ல.
தேசிய பாதுகாப்பு விஷயத்தில் எந்த சமரசத்திற்கும் இடம் இல்லை. எனவே, சட்டவிரோதமாக நம் நாட்டிற்குள் நுழைபவர்களுக்கு இனி இடம் இல்லை. அவர்களை அடையாளம் கண்டு நாடு கடத்தும் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.