பாக்., ட்ரோன்கள் வெடிக்கவில்லை முப்படை தலைமை தளபதி பேச்சு
பாக்., ட்ரோன்கள் வெடிக்கவில்லை முப்படை தலைமை தளபதி பேச்சு
ADDED : ஜூலை 17, 2025 01:50 AM
புதுடில்லி: “ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையில், நம் நாட்டிற்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் வீசிய பல, 'ட்ரோன்கள்' வெடிக்கவில்லை,” என, முப்படை தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நேற்று நடந்த பாதுகாப்பு கருத்தரங்கில், முப்படை தளபதி அனில் சவுகான் பேசியதாவது:
பழமை வாய்ந்த ஆயுதங்களால், இன்றைய போர்களை வெல்ல முடியாது; இன்றைய போர்களை வெல்ல நாளைய தொழில்நுட்பம் தேவை. காலாவதியான ஆயுதங்களை கொண்டு இந்தியா, நவீன போர்களை எதிர்கொள்ள முடியாது.
'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது, வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட, 'ட்ரோன்'கள் எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்களை பாகிஸ்தான் ஏவியது. இதனால், இந்திய ராணுவத்திற்கோ, நம் நாட்டின் உட்கட்டமைப்பிற்கோ எந்த சேதத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. அவற்றில் பெரும்பாலான ட்ரோன்கள் வெடிக்கவில்லை.
எனவே, வான் வழி அச்சுறுத்தல்களை நாம் திறம்பட எதிர்கொள்ள உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ட்ரோன்களும் அவற்றை தடுக்கும் கவசங்களும், அவசியம் என்பதை ஆப்பரேஷன் சிந்துார் நமக்கு உணர்த்தி உள்ளது. இதேபோல், வெளிநாட்டு தொழில்நுட்பங்களை சார்ந்திருப்பது, நம்மை பலவீனப்படுத்தும்.
இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு, ட்ரோன் தொழில்நுட்பங்களை உருவாக்குவது அவசியம். அவற்றில் தன்னிறைவு அடைவதுடன், நம் நாட்டு நலனை பாதுகாக்கவும், எதிர்கால வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவும் இது அதிகாரம் அளிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.