ADDED : பிப் 19, 2025 04:43 PM

விசாகப்பட்டினம்: பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்புடைய மூன்று பேர் தேசிய புலனாய்வு அமைப்பு என்.ஐ.ஏ.,வால் செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே ஐந்து பேர் கைதான நிலையில் தற்போது என்.ஐ.ஏ., 3 பேரை கைது செய்துள்ளது. கர்நாடகா மற்றும் கேரளாவில் உள்ளூர் போலீசார் உதவியுடன் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வேதன் லட்சுமணன் தண்டேல் மற்றும் அக்ஷய் ரவி நாயக் ஆகியோர் கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டத்தில் இருந்து கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று கொச்சியில் இருந்து அபிலாஷ் கைது செய்யப்பட்டார். இதன் மூலம், இந்த வழக்கில் மொத்தம் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.
ஆந்திரா புலனாய்வுப் பிரிவு போலீசார் ஜனவரி 2021ல் பதிவு செய்த இந்த வழக்கில், பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி திரட்டுதல் மற்றும் சதித்திட்டம் தீட்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன.
ஜூன் 2023ல், இந்த வழக்கில் வெளிநாட்டு உளவுத்துறை அமைப்பினருக்கு தொடர்பு இருப்பதாக ஆந்திரா போலீசார் சந்தேகித்ததை அடுத்து என்.ஐ.ஏ., இந்த வழக்கை ஏற்றுக்கொண்டது.
கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகளும் சமூக ஊடகங்கள் மூலம் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புகளுடன் (பிஐஓக்கள்) தொடர்பில் இருந்ததாகக் கண்டறியப்பட்டது. அவர்கள் கார்வார் கடற்படைத் தளம் மற்றும் கொச்சி கடற்படைத் தளத்தில் உள்ள இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் பற்றிய முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாகவும், தகவலுக்கு ஈடாக பிஐஓக்களிடமிருந்து பணம் பெற்றதாகவும் தெரியவந்துள்ளன.
இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக, கடற்படை பற்றிய முக்கியமான தகவல்களை கசியவிட்ட குற்றத்தை இவர்கள் செய்துள்ளனர்.
பாகிஸ்தானியரான மீர் பாலாஜ் கான், கைது செய்யப்பட்ட குற்றவாளி ஆகாஷ் சோலங்கியுடன் சேர்ந்து இவர்கள் இந்த குற்றத்தை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.