எல்லையில் பறந்த பாக் ராணுவ ட்ரோன்கள்: காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு
எல்லையில் பறந்த பாக் ராணுவ ட்ரோன்கள்: காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு
ADDED : ஜன 12, 2026 07:41 PM

ரஜோரி: ஜம்மு-காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு, சர்வதேச எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு சொந்தமான, ட்ரோன்கள் பறப்பது கண்டறியப்பட்டநிலையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் நவ்ஷேரா -ரஜோரி பகுதியில் சர்வதேச எல்லை கட்டுப்பாடு கோடு உள்ளது. இங்குள்ள பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் சில ட்ரோன்கள் காணப்பட்டன.
இது தொடர்பாக, பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:
பாகிஸ்தானைச் சேர்ந்தவை என சந்தேகிக்கப்படும் சில ட்ரோன்கள், நேற்று (ஜனவரி 11) இரவு நேரங்களில் ஜம்மு காஷ்மீரின் நவ்ஷேரா -ரஜோரி செக்டாரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் தென்பட்டது.
அதனை தொடர்ந்து, ஆளில்லா வான்வழி அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தூண்டியது.இதனால் அவை திரும்பிச் செல்லும்படி கட்டாயப்படுத்தப்பட்டன.
முன்னதாக ஜனவரி 10, அன்று சம்பா மாவட்டத்தில் உள்ள பலூரா என்ற எல்லைக் கிராமத்தில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் அடங்கிய ஒரு பொதி மீட்கப்பட்டது.
அதைதொடர்ந்து எல்லைப் பாதுகாப்புப் படையுடன் ஜம்மு காஷ்மீர் போலீஸ் இணைந்து ஒரு தேடுதல் வேட்டையைத் தொடங்கின. அதை தொடர்ந்து தற்போது பாகிஸ்தான் ராணுவத்திற்கு சொந்தமான சில ட்ரோன்கள் பறந்த நிலையில் வரும் ஜனவரி 26 அன்று நடைபெறவுள்ள குடியரசு தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
