ADDED : அக் 11, 2024 07:03 AM
பெங்களூரு: பாகிஸ்தான் கராச்சியை சேர்ந்தவர் முகமது பஹத். பயங்கரவாதியான இவர், மைசூரில் சட்டவிரோதமாக வசித்தார். சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கடந்த 2011ல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் இருந்த போது, வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட, பெங்களூரின் சையது அப்துல் ரகுமான், சிக்பல்லாபூரின் சிந்தாமணியின் அப்சர் பாஷா ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது.
இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து, பயங்கரவாத செயலுக்கு சதி திட்டம் தீட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பெங்களூரு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.தண்டனையை எதிர்த்து மூன்று பேரும், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். மனுவை நீதிபதி சீனிவாஸ் ஹரிஷ் குமார், ஜே.எம்.,காஜி விசாரித்து வந்தனர்.
மனு மீதான விசாரணை முடிந்த நிலையில், நீதிபதிகள் நேற்று தீர்ப்பு கூறுகையில், 'குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயங்கரவாத செயலுக்கு சதி திட்டம் தீட்டியதற்கு, போதுமான ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை. இதனால் அவர்களுக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த, ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது' என்றனர்.