பயங்கரவாதிகளை தூண்டி விடுவதை ஒப்புக் கொண்ட பாகிஸ்தான்
பயங்கரவாதிகளை தூண்டி விடுவதை ஒப்புக் கொண்ட பாகிஸ்தான்
ADDED : ஜூலை 31, 2026 07:02 PM

புதுடில்லி: இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாதத்தை தூண்டி விடுவதை பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் நடத்தியவர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் பிரதமரின் அரசியல் விவகாரங்களுக்கான சிறப்பு ஆலோசகர் ராணா சனாவுல்லா அளித்த பேட்டி ஒன்றில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் நடத்துபவர்களை ஒரு காலத்தில் பயங்கரவாதிகளாக மாற்றி பயிற்சி அளித்து அனுப்பினோம். இன்று அவர்கள் நமது கழுத்தை நெறிக்கின்றனர் எனத் தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது:ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்களை பாகிஸ்தான் அமைப்புகள் கொடூரமாக நடத்தியதை அனைவரும் பார்த்து இருப்பீர்கள். இதனால், அப்பாவி மக்கள் 40 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்கிரமிப்பு காஷ்மீரின் அப்பாவி மக்கள் மீது பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் அவமதிப்பு என்பது, அவர்களை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் எதிரிகள் என முத்திரை குத்திய போது அப்பட்டமாக தெரிந்தது.பாகிஸ்தானிய அமைப்புகள் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி, நிதியுதவி, ஆயுதங்கள் அளித்து இந்தியாவிற்கு அனுப்பியவர்கள் தங்களுக்கு எதிராக திரும்பியதையும், இந்தியாவிற்கு எதிராக அவர்களை பயன்படுத்தியதையும் பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு ஆலோசகர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டு உள்ளார்.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்ததாக சொல்லப்படும் தேர்தல், பாகிஸ்தான் அமைப்புகளை அவமரியாதையுடன் நிராகரித்ததை காட்டுகிறது. வன்முறை ராஜியத்தை எதிர்கொண்டு வரும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள், சட்டவிரோதமாக கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க சர்வதேச அமைப்புகள் சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர். தனது நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தானை சர்வதேச சமூகம் பொறுப்பு ஏற்க வைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்க நாளிதழுக்கு கண்டனம்
ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தானி காஷ்மீர் எனக்குறிப்பிட்ட அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: ஒட்டு மொத்த காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதிகள். இது தான் இந்தியாவின் நிலைப்பாடு. இந்த பகுதிகள், இந்த பிராந்தியங்கள் இந்தியாவின் ஒரு அங்கமாக இருக்கிறது. எதிர்காலத்திலும் நீடிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
கவனம்
ரஷ்யாவில் வேலைவாய்ப்பு உள்ளதாக வரும் விளம்பரங்களில் கவனமாக இருக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.இது தொடர்பாக ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: ரஷ்யாவில் உள்ள இந்தியர்களை விடுவிக்க ரஷ்யா உடன் தொடர்ந்து பேசி வருகிறோம். இந்தியாவின் முயற்சியால் 139 பேர் நாடு திரும்பினர். இன்னும் எஞ்சி உள்ள சிலரை விடுவிப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. தனிநபர்கள் மற்றும் முகமைகளால் வழங்கப்படும், வேலை வாய்ப்புகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என மீண்டும் ஒருமுறை எச்சரிக்க விரும்புகிறோம் எனக்கூறியுள்ளார்.
