ADDED : ஏப் 28, 2025 01:25 AM

ஸ்ரீநகர் : எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே, தொடர்ந்து மூன்றாவது நாளாக, பாக்., ராணுவத்தினர் நேற்றும் அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில், 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்தியா - பாக்., இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.
கடந்த 25, 26 ஆகிய தேதிகளில், ஜம்மு - காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி அருகே, இரவு நேரத்தில், பாக்., ராணுவத்தினர் நம் ராணுவ துருப்புகளை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றிரவும், எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே, நம் ராணுவ துருப்புகளை குறிவைத்து, பாக்., ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.
இதற்கு நம் ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இதற்கிடையே, பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் மூன்று பயங்கரவாதிகளின் வீடுகளை, மாநகராட்சி அதிகாரிகள் நேற்று இடித்து தள்ளினர்.
பந்திபோரா, புல்வாமா, சோபியான் ஆகிய மாவட்டங்களில், மூன்று பயங்கரவாதிகளின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதுவரை, ஒன்பது பயங்கரவாதிகளின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன.