பாக்., ராணுவம் சதி! பஹல்காம் தாக்குதல் குறித்து அதிர்ச்சி தகவல்: உள்நாட்டு குழப்பங்களை திசைதிருப்ப நாடகம்
பாக்., ராணுவம் சதி! பஹல்காம் தாக்குதல் குறித்து அதிர்ச்சி தகவல்: உள்நாட்டு குழப்பங்களை திசைதிருப்ப நாடகம்
UPDATED : ஏப் 27, 2025 11:04 AM
ADDED : ஏப் 27, 2025 12:31 AM

உள்நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் மற்றும் நாடு தன் முழு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக, பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டு நடத்தியதே, பஹல்காம் தாக்குதல் என, நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஜம்மு - காஷ்மீரின் தென் பகுதியில் உள்ள பஹல்காம் அருகே உள்ள பைசரன் புல்வெளி பகுதியில் சுற்றுலா பயணியர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இது சமீப காலங்களில் நடந்த மிகப்பெரிய தாக்குதல்.
மேற்காசிய நாடான சவுதி அரேபியாவுக்கு சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, தன் பயணத்தை பாதியில் முடித்து நாடு திரும்பினார்.
இதையடுத்து இந்தப் பிரச்னையை மத்திய அரசு எவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது என்பது தெரியவருகிறது.
எதிர்பார்ப்பு
இந்த தாக்குதலை நடத்தியதாக, நம் அண்டை நாடான பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் பினாமியாக செயல்படும், டி.ஆர்.எப்., எனப்படும் 'த ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்' கூறியுள்ளது. ஆனால், பாகிஸ்தான் அரசு, இதற்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என்று கூறியுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் இடையேயான உறவுகள் எப்போதும் நிலையாக இருந்ததில்லை. தொடர்ந்து பதற்றமாகவே இருந்து வருகிறது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய அரசு நடவடிக்கைகளை எடுக்குமோ என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து ஜம்மு - காஷ்மீர் முன்னாள் டி.ஜி.பி.,யான எஸ்.பி., வைத் கூறியுள்ளதாவது:
பஹல்காமில் நடந்துள்ள தாக்குதலைப் பார்க்கும்போது, இது நிச்சயம், பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அதன் எஸ்.எஸ்.ஜி., எனப்படும் சிறப்பு அதிரடி படையினர் நடத்திய தாக்குதலாகவே தெரிகிறது. பயங்கரவாதிகள் என்ற பெயரில், அவர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த பல ஆண்டுகளாகவே சர்வதேச அரங்கில், இந்தியாவை முன்னிலைப்படுத்தும் முயற்சியில் பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட்டுள்ளார். இதன் வாயிலாக உலக அளவில் இந்தியாவின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தை வைத்து தொடர்ந்து அரசியல் செய்து வருகிறது பாகிஸ்தான்.
தற்போது அங்கு தேர்தல் நடத்தப்பட்டு, இயல்பு நிலை திரும்பியுள்ளது. மேலும், சுற்றுலா உட்பட பொருளாதார வளர்ச்சிகளும் அங்கு மேம்பட்டுள்ளன.
இந்த சூழ்நிலைகளில், இந்தியாவில் பயங்கரவாத தாக்குதலை நடத்தி, அதன் வாயிலாக குளிர் காய்வதற்கு பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டது.
பாகிஸ்தானில் தற்போது பலுசிஸ்தான் மகாணத்தில், பயங்கரவாதிகள் தீவிரமாக போராடி வருகின்றனர். சிந்து மகாணத்தில், கால்வாய் அமைக்கும் திட்டத்துக்கு எதிராக உள்ளூர் மக்கள் சாலையில் இறங்கி போராடி வருகின்றனர்.
போராட்டம்
பஞ்சாப் மாகாணத்தில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.
அண்டை நாடான ஆப்கானிஸ்தான் எல்லையில் பதற்றம் போன்றவற்றை பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. ஏற்கனவே, கடுமையான நிதி நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கியுள்ளது. இதனால் மக்கள், ஆட்சியாளர்கள் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்த சூழ்நிலைகளில் மக்களை ஒருங்கிணைக்கும் ஆயுதமாக போரை பயன்படுத்த பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டது. நாடும், அரசும், நாட்டு மக்களும் தங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே, பாகிஸ்தான் ராணுவம், பயங்கரவாதிகள் என்ற பெயரில் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -

