இந்தியாவுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் ஜெயிக்க முடியாது!: ராஜஸ்தானில் பிரதமர் மோடி ஆவேச பேச்சு
இந்தியாவுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் ஜெயிக்க முடியாது!: ராஜஸ்தானில் பிரதமர் மோடி ஆவேச பேச்சு
ADDED : மே 23, 2025 01:21 AM

பிகானீர்: ''என் ரத்த நாளங்களில் ஓடுவது ரத்தமல்ல; கொதிக்கும் சிந்துார் எனப்படும் குங்குமம் தான். இந்தியாவுக்கு எதிரான போரில் பாகிஸ்தானால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. இந்தியாவை சீண்டினால் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கைக்கு பின், ராஜஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பங்கேற்றார்.
பாகிஸ்தானை ஒட்டி அமைந்துள்ள பிகானீர் மாவட்டம் பலானாவில் நடந்த நிகழ்ச்சியில், 26,000 கோடி ரூபாய் மதிப்பிலான நலத் திட்டங்களை துவக்கி வைத்து அவர் பேசியதாவது:
பாரத மாதாவின் சேவகனாக மோடி நெஞ்சை நிமிர்த்தி இங்கே நிற்கிறேன். மோடியின் எண்ணம் நிதானமாகத் தான் இருக்கும். ஆனால், மோடியின் ரத்தம் கொதிக்கிறது. மோடியின் நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை; சிந்துார் என்னும் குங்குமம் தான் ஓடுகிறது.
சிந்துார் வெடிமருந்தாக மாறும்போது என்ன நடக்கும் என்பதை உலகமும், நாட்டின் எதிரிகளும் இப்போது நேரடியாக பார்த்துள்ளனர்.
பஹல்காமில் பயங்கரவாதிகள் மதத்தை கேட்டு நம் சகோதரிகளின் சிந்துாரை அழித்தனர். அந்த குண்டுகள் பஹல்காமில் சுடப்பட்டிருந்தாலும், அவை நாட்டின் 140 கோடி மக்களின் இதயங்களை துளைத்தன.
மக்களின் ஆசியாலும், ராணுவத்தின் வீரத்தாலும் பயங்கரவாதிகளை அழிப்போம் என்ற உறுதிமொழியை நிறைவேற்றியுள்ளோம். பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் ஒன்பது மறைவிடங்களை, 22 நிமிடங்களில் அழித்தோம்.
முப்படைகளின் அதிரடி யான சக்கர வியூக தாக்குதலுக்கு முன் பாகிஸ்தான் மண்டியிட்டது. இனி பாகிஸ்தானிடம் வர்த்தகமோ, பேச்சோ கிடையாது. நமக்கு சொந்தமான தண்ணீரை பாகிஸ்தான் இனி பெறாது.
நம் நாட்டவரின் ரத்தத்துடன் விளையாடுவதற்கு, பாகிஸ்தான் மிகப்பெரும் விலையை கொடுக்க வேண்டி இருக்கும். ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலுக்கும், இந்திய பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுப்பர் என்பதை நிரூபித்துள்ளோம். இது, பழி வாங்கும் விளையாட்டு அல்ல; ஒரு புதிய நீதி வடிவம்.
இந்தியாவுக்கு எதிரான நேரடி போரில், பாகிஸ்தானால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு இந்தியா பயப்படப் போவதில்லை. பிகானீர் விமான தளத்தை பாக்., குறி வைத்த பாகிஸ்தானின் ரஹீம் யார் கான் விமானப்படை தளம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நம் ஆயுதப் படைகளின் துணிச்சலால் தான் இன்று நாம் வலுவாக நிற்கிறோம். எங்கள் அரசு, மூன்று படைகளுக்கும் சுதந்திரம் கொடுத்தது.
மேலும் ஒன்றாக, முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்தும் உத்தியை வகுத்தன. அது, பாகிஸ்தான் சரண் அடைய வழி வகுத்தது. அவர்களுடன் இனி எந்த வகையிலும் பேச்சு என்பதே கிடையாது. அப்படி பேசினால், அது அவர்கள் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பற்றியதாக மட்டுமே இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற கர்ணி மாதா கோவிலுக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடி வழிபட்டார்.