அவங்களுக்கு மோடின்னா ரொம்ப பயம்! பாக்.,கை பந்தாடிய அமித் ஷா
அவங்களுக்கு மோடின்னா ரொம்ப பயம்! பாக்.,கை பந்தாடிய அமித் ஷா
ADDED : செப் 22, 2024 08:44 AM

ஸ்ரீநகர்: பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி என்றால் ரொம்ப பயம் என்று அமைச்சர் அமித் ஷா கூறி உள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் 3 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு முதல் கட்ட ஓட்டுப்பதிவு கடந்த 18ம் தேதி நடந்து முடிந்தது. 2ம் கட்ட தேர்தல் வரும் 25ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் 3 நாள் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் செய்து வரும் பா.ஜ., மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மெந்தார் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பிரசார பொதுக் கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது; இளைஞர்கள் கைகளில் இதுவரை துப்பாக்கிகளும், கற்களும் இருந்து வந்தன. இன்று அந்த நிலையை மாற்றிவிட்டு மடிக்கணினிகள் வழங்கி பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டோம்.
மக்கள் பாதுகாப்புக்காக ஜம்மு பகுதியில் அதிக பதுங்கு குழிகளை அமைப்போம். 1990களில் இருந்தது போல் எல்லை தாண்டிய பயங்கரவாதம் இல்லை. அதை ஒழித்து விட்டோம். முந்தைய ஆட்சியாளர்கள் பாகிஸ்தானை கண்டு பயந்தனர். ஆனால் இப்போது பிரதமர் மோடியை கண்டு பாகிஸ்தான் பயப்படுகிறது.
அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்த துணிய மாட்டார்கள். ஒரு வேளை அப்படி நடந்தால் இந்தியா தகுந்த பதிலடி தரும். தீவிரவாதத்தால் எந்த பயனும் இல்லை. இங்குள்ள இளைஞர்களை அதிக அளவில் ராணுவத்தில் சேர்க்க சிறப்பு ஆள்சேர்க்கை முகாம் ஒன்றை நடத்த உள்ளோம்.இவ்வாறு அமித் ஷா உரையாற்றினார்.