எல்லையில் நுழைந்த பி.எஸ்.எப்., வீரரை 20 நாளுக்கு பின் ஒப்படைத்தது பாகிஸ்தான்
எல்லையில் நுழைந்த பி.எஸ்.எப்., வீரரை 20 நாளுக்கு பின் ஒப்படைத்தது பாகிஸ்தான்
ADDED : மே 15, 2025 12:24 AM

புதுடில்லி: எல்லை தாண்டியதாக பாக்., படையினரால் கைது செய்யப்பட்ட நம் எல்லை பாதுகாப்பு படை வீரர் பூர்ணம் குமார் ஷா, 20 நாட்களுக்குப் பின் நம் நாட்டிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர்.
தாக்குதல் நடந்த அடுத்த நாளான ஏப்., 23ல், பஞ்சாபின் பெரோஸ்பூர் அருகே, இந்தியா - பாக்., எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, பி.எஸ்.எப்., எனப்படும், எல்லை பாதுகாப்பு படை வீரர் பூர்ணம் குமார் ஷா, தவறுதலாக பாக்., எல்லைக்குள் சென்றார்.
அவரை பாக்., ரேஞ்சர்ஸ் படையினர் கைது செய்தனர். அவரை ஒப்படைக்கும்படி நம் நாட்டின் சார்பில் பலமுறை வலியுறுத்தப்பட்டது.
இதற்கிடையே, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை, கடந்த 7ல், நம் ராணுவத்தினர் அழித்தனர்.
தொடர்ந்து, இந்தியா - பாக்., இடையே நான்கு நாட்களாக மோதல் நீடித்ததால், பூர்ணம் குமார் ஷாவை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டது. பாக்., கெஞ்சியதை அடுத்து, போர் நிறுத்தத்துக்கு நம் நாடு ஒப்புக் கொண்டது.
இந்நிலையில், பாக்., ரேஞ்சர்ஸ் படையினரால் கைது செய்யப்பட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர் பூர்ணம் குமார் ஷா, 20 நாட்களுக்குப் பின், நம் நாட்டு அதிகாரிகளிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டார்.
பஞ்சாபின் அட்டாரி - வாகா எல்லையில், நேற்று காலை 10:30 மணி அளவில், பாக்., அதிகாரிகள் அவரை ஒப்படைத்தனர்.