'ஆப்பரேஷன் சிந்துார்' தாக்குதலில் பாக்., இழந்தது... 6 போர் விமானங்கள் !: முதல்முறையாக மனம் திறந்தார் விமானப்படை தளபதி
'ஆப்பரேஷன் சிந்துார்' தாக்குதலில் பாக்., இழந்தது... 6 போர் விமானங்கள் !: முதல்முறையாக மனம் திறந்தார் விமானப்படை தளபதி
UPDATED : ஆக 10, 2025 01:15 AM
ADDED : ஆக 10, 2025 01:01 AM

புதுடில்லி: ''ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையின் போது, பாகிஸ்தானின் ஆறு போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன,'' என நம் விமானப்படை தளபதி ஏர் சீப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் நேற்று தெரிவித்தார். ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் ஹிந்து சுற்றுலா பயணியரை குறிவைத்து திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், 26 பேர் பலியாகினர்.
இதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது மே 7ம் தேதி அதிகாலை இந்திய படையினர், 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் தாக்குதல் நடத்தினர்.
இதில், லஷ்கர் - இ - தொய்பா, ஜெய்ஷ் - இ - முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் முக்கிய கட்டமைப்புகள் தகர்க்கப்பட்டன. இந்த தாக்குதலில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பதிலடி இதையடுத்து, எல்லையை ஒட்டியிருந்த பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு - காஷ்மீர் மாநிலங்களில் பாக்., ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்திய படைகளின் பதிலடியால், பாகிஸ்தான் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இரு தரப்புக்குமான சண்டை மே 10ம் தேதி முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கை போது, பாகிஸ்தானின் ஆறு போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நம் விமானப் படை தளபதி அமர் ப்ரீத் சிங் நேற்று தெரிவித்தார்.
கர்நாடகாவின் பெங்களூரில் நடந்த விமான தளபதி எல்.எம்.கத்ரே நினைவு சொற்பொழிவில் அவர் கூறியதாவது:
'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை மிகவும் துல்லியமாக திட்டமிடப்பட்டது. தாக்குதலுக்கு முன்பாகவே, பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத முகாம்கள் அடையாளம் காணப்பட்டன.
பாகிஸ்தான் தாக்குதலில் இருந்து தப்பிக்க, நம் வான் பாதுகாப்பு அமைப்பு சிறப்பாக வேலை செய்தது.
ரஷ்யாவிடம் இருந்து சமீபத்தில் வாங்கிய, 'எஸ் - 400' கவச அமைப்பு, பெருமளவு உதவியது. அந்நாட்டு ராணுவம் வீசிய குண்டுகள், ஏவுகணைகளை இந்த அமைப்பு முறியடித்து, வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது.
'எஸ் - 400' கவச அமைப்பை மீறி பாக்., ராணுவத்தால் எதையும் செய்ய முடியவில்லை.
இது ஒரு உயர் தொழில்நுட்பப் போர். 90 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த போர், பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியது.
அந்நாட்டின் ஐந்து போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. எதிரிகளின் விமானங்கள், ஆயுதங்களை கண்காணித்து தாக்குதலை முறியடிக்கும் 'ஏ.இ.டபிள்யூ.சி' எனப்படும் மிகப்பெரிய போர் விமானமும், இந்த தாக்குதலின் போது அழிக்கப்பட்டது.
அது மட்டுமின்றி, ஜகோபாபாத் நகரில் இருந்த விமான தளத்தில் நடத்திய தாக்குதலில் எப் - 16 விமானங்கள் சுக்குநுாறாகின. இந்த விமானங்களை, அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் வாங்கியிருந்தது.
மத்திய அரசு வழங்கிய முழு சுதந்திரத்தால், நம் விமானப் படையால் சிறப்பாக செயல்பட முடிந்தது. மக்கள் போரை விரும்பினர். பாக்.,கிற்கு பதிலடி தர முடிவு செய்தனர்.
சரியான முடிவு இது எங்களால் சாத்தியமானது. ஒரு கட்டத்தில், சமாளிக்க முடியாது என தெரிந்த பின், போரை நிறுத்தும் முடிவுக்கு பாகிஸ்தான் வந்தது.
சண்டை வேண்டாம் என்ற செய்தியை நமக்கு அனுப்பியது. இதை தொடர்ந்து போர் முடிவுக்கு வந்தது. இந்த விஷயத்தில், மத்திய அரசு எடுத்த முடிவு சரியானது.
இவ்வாறு அவர் கூறினார்.
நம் ராணுவம் நடத்திய தாக்குதலில், அந்நாட்டில் சேதமடைந்த பல விமான தளங்கள் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை எனக் கூறிய தளபதி அமர் ப்ரீத் சிங், தாக்குதலுக்கு முன்பும், பின்பும் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களை ஆதாரங்களாக காண்பித்தார்.
பிரதான ஆயுதமாகும்
'பிரம்மோஸ்' ஏவுகணை
நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு எதிராக, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின்போது, 'பிரம்மோஸ்' ஏவுகணை மற்றும், 'ஆகாஷ்தீர்' போர் தடுப்பு கவசம், பெரும் பங்காற்றின. இதன் செயல்பாடுகளின் வாயிலாக, நம் ராணுவத்தில் பிரதான ஆயுதமாக இது மாறியுள்ளதாக டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் தலைவர் சமீர் காமத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “உள்நாட்டு தொழில்நுட்பம் வாயிலாக, இந்தியா தன் எல்லைகளைப் பாதுகாக்கும் திறனைக் கொண்டுள்ளது என்பது உலகிற்கு பறைசாற்றப்பட்டுள்ளது. ''இவை அனைத்தும், டி.ஆர்.டி.ஓ., அமைப்பால் உருவாக்கப்பட்டவை. நம் ராணுவத்தின் பிரதான ஆயுதமாக, 'பிரம்மோஸ்' பயன்படுத்தப்பட்டு வருகிறது. ''இதேபோல், 'ஆகாஷ்தீர்' போர் தடுப்பு கவசமும் நம் நாட்டின் எல்லையை பாதுகாத்து வருவதில் முதன்மை பங்கு வகிக்கிறது,'' என்றார்.