இந்தியா தாக்கினால் வெடிக்க போவது.. அணு ஆயுத போர்: பாகிஸ்தான் அமைச்சர் பகிரங்க மிரட்டல்
இந்தியா தாக்கினால் வெடிக்க போவது.. அணு ஆயுத போர்: பாகிஸ்தான் அமைச்சர் பகிரங்க மிரட்டல்
UPDATED : ஏப் 28, 2025 12:56 AM
ADDED : ஏப் 28, 2025 12:18 AM

புதுடில்லி,:''எங்களிடம் 130 அணுகுண்டுகள் உள்ளன. அவை இந்திய நகரங்களை நோக்கி ஏவ தயாராக உள்ளன. இந்தியா எங்களை தாக்கினால், அணு ஆயுதப் போர் வெடிக்கும்,'' என, பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஹனிப் அப்பாஸி பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமுக்கு சுற்றுலா சென்றிருந்தவர்களில், 26 ஹிந்துக்களை தேர்ந்தெடுத்து பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து செயல்படும், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளையான, 'தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்' என்ற அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக ஒப்புக்கொண்டது.
முதல் முறையாக அப்பாவி பொதுமக்களை, குறிப்பாக ஹிந்துக்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதல், உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காஷ்மீரில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்களும், நாடு முழுதும் உள்ள முஸ்லிம் அமைப்பினரும் முதல் முறையாக ஒருமித்த குரலில் இந்த கொடுமையை பலமாக கண்டித்துள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்களையும், அவர்களை பின்னால் இருந்து இயக்குபவர்களையும் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பொதுமக்கள் அழுத்தம் கொடுக்கின்றனர். பிரதமர் மோடியும் நிர்வாக ரீதியாக சில அதிரடியான நடவடிக்கைகளை எடுத்தார்.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து; அட்டாரி - வாகா எல்லை மூடல்; பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு; விசா மறுப்பு; பாகிஸ்தானில் உள்ள இந்திய துாதரகம் மூடல் போன்றவை இதில் அடங்கும்.
இதை அடுத்து ராணுவ தாக்குதல் நடக்கும்; அது போராக வெடிக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. இதனால் பாகிஸ்தான் அரசும், அரசியல்வாதிகளும் பதற்றம் அடைந்துள்ளனர். இந்தியாவை மிரட்டும் விதமாக தினமும் ஏதாவது கூறி வருகின்றனர்.
முன்னாள் வெளியுறவு அமைச்சரும், முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோவின் மகனுமான பிலாவல் புட்டோ, 'சிந்து நதியில் நீரை நிறுத்தினால், இந்தியர்களின் ரத்தம் ஆறாக பாயும்' என பேசினார். பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஹனிப் அப்பாஸி நேற்று ஒரு பேட்டியில் மிரட்டலை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றார்.
''பாகிஸ்தானிடம் அணுகுண்டுகள், ஏவுகணைகள் இருக்கின்றன. அவற்றை நாங்கள் காட்சிப் பொருட்களாக வைத்திருக்கவில்லை. ஏவுகணைகளும், 130 அணு குண்டுகளும் இந்திய நகரங்களை குறிவைத்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
''இந்தியா எங்களை தாக்கினால், அணு ஆயுதப் போர் வெடிக்கும் என்பதை உணர வேண்டும்,” என, அப்பாஸி கூறினார்.

