பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசம் வரும்: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசம் வரும்: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
UPDATED : மே 29, 2025 02:46 PM
ADDED : மே 29, 2025 02:44 PM

புதுடில்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவிடம் திரும்பும் நாள் வெகு தொலைவில் இல்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார்.
டில்லியில் வணிக உச்சி மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பெரும்பான்மையான மக்கள் இந்தியாவுடன் வலுவான தொடர்பை உணர்கிறார்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவிடம் திரும்பும் நாள் வெகு தொலைவில் இல்லை. விரைவில் இந்தியா வசம் வரும்.
ரூ.23,500 கோடி
இந்தியாவின் பாதுகாப்பு துறையில் ஏற்றுமதி 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1000 கோடிக்கும் குறைவாக இருந்தது; இப்போது அது ரூ.23,500 கோடி என்ற சாதனை அளவை எட்டியுள்ளது. பயங்கரவாதத்தை நடத்துவது செலவு குறைந்ததல்ல. இன்று, பாகிஸ்தான் அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்துள்ளது.
ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற தீர்மானத்திற்கு நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்.பாக்., ராணுவ நிலைகளை இந்திய ராணுவம் தாக்கியபோது கட்டுப்பாடுடன் நடந்துகொண்டது; பாக்., பயங்கரவாத முகாம்கள், எதிரிகளின் விமான தளங்கள், ராணுவ நிலைகள் குறிவைத்துத் தாக்கப்பட்டது.
ஆச்சரியப்படுத்தியது!
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு உபகரணங்கள் தங்கள் திறனையும், வலிமையையும் வெளிப்படுத்தி முழு உலகையும் ஆச்சரியப் படுத்தியது. நாங்கள் போர் விமானங்கள் அல்லது ஏவுகணைகளை மட்டும் உற்பத்தி செய்யவில்லை; அடுத்த தலைமுறை போர் தொழில்நுட்பங்களுக்கும் நாங்கள் தயாராகி வருகிறோம். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.