தேசிய கொடிக்கு 21 முறை வணக்கம் செலுத்த வேண்டும் பாக்., ஆதரவாளருக்கு நிபந்தனை ஜாமின்
தேசிய கொடிக்கு 21 முறை வணக்கம் செலுத்த வேண்டும் பாக்., ஆதரவாளருக்கு நிபந்தனை ஜாமின்
ADDED : அக் 18, 2024 01:03 AM
ஜபல்பூர், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய நபருக்கு, 'வழக்கின் விசாரணை முடியும் வரை, மாதமிருமுறை தேசிய கொடிக்கு 21 முறை வணக்கம் செலுத்தி, 'பாரத் மாதா கீ ஜே' என முழக்கமிட வேண்டும்' என, மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் அளித்துள்ளது.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பைசல் எனப்படும் பைசான் என்ற நபர், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் பொது இடத்தில் கோஷம் எழுப்பியதாக மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தன்னை ஜாமினில் விடுவிக்கக் கோரி, அவரது தரப்பில் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி பலிவால் தன் உத்தரவில் கூறியதாவது:
தான் பிறந்து வளர்ந்த மண்ணுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்த நபர் முழக்கங்கள் எழுப்பியது குற்றச்சாட்டில் உறுதியாகியுள்ளது. பிணைத் தொகையாக 50,000 ரூபாய் செலுத்தும்பட்சத்தில், அவருக்கு ஜாமின் வழங்கப்படும்.
அதுமட்டுமின்றி, வழக்கு விசாரணை முடியும் வரை, போபாலில் உள்ள மிஸ்ரட் போலீஸ் ஸ்டேஷனில் ஏற்றப்படும் தேசியக் கொடிக்கு மாதந்தோறும் முதல் மற்றும் நான்காம் செவ்வாய்கிழமைகளில் காலையில், 'பாரத் மாதா கீ ஜே' என்ற முழக்கத்துடன், 21 முறை இந்த நபர் வணக்கம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.