இந்திய கடற்படை களமிறங்கி இருந்தால் பாகிஸ்தான் நான்கு நாடுகளாக பிரிந்து இருக்கும்: ராஜ்நாத் சிங் பேச்சு
இந்திய கடற்படை களமிறங்கி இருந்தால் பாகிஸ்தான் நான்கு நாடுகளாக பிரிந்து இருக்கும்: ராஜ்நாத் சிங் பேச்சு
ADDED : மே 30, 2025 03:44 PM

பனாஜி: ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய கடற்படையும் இணைந்து இருந்தால், பாகிஸ்தான் நான்கு நாடுகளாக பிரிந்து இருக்கும் ,'' என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில் கடற்படை அதிகாரிகள் மத்தியில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
* பயங்கரவாதத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தானை எச்சரிக்கிறேன். பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட மசூத் அசார் மற்றும் ஹபீஸ் சயீத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்.
* சுதந்திரம் அடைந்ததிலிருந்து பாகிஸ்தான் விளையாடி வரும் ஆபத்தான பயங்கரவாத விளையாட்டு இப்போது முடிந்துவிட்டது என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
* பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது. பயங்கரவாத சக்திகளை எதிர்கொள்ள அனைத்து வழிகளிலும் இந்தியா செயல்படும்.
* பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.பாகிஸ்தானால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாதவற்றைப் பயன்படுத்தத் இந்தியா தயங்காது.
* பாகிஸ்தான் மண்ணில் செயல்படும் பயங்கரவாதிகளை அவர்களே அழிப்பது அந்நாட்டிற்கு நல்லது.
* ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நேரடித் தாக்குதலாகும்.
* பாகிஸ்தான் உலகளவில் மன்றாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
* கடந்த 1971 ல் இந்திய கடற்படை போரில் ஈடுபட்ட போது, பாகிஸ்தான் இரண்டு நாடுகளாக பிரிந்ததை நாம் பார்த்தோம். தற்போது, ஆபரேஷன் சிந்தூரில் இந்திய கடற்படை களமிறங்கி இருந்தால், பாகிஸ்தான் இரண்டாக அல்ல, நான்கு நாடுகளாக பிரிந்து இருக்கும் என நினைக்கிறேன்.
இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.