பாக்.,கிற்கு ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காது: அமைச்சர் உறுதி
பாக்.,கிற்கு ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காது: அமைச்சர் உறுதி
ADDED : ஏப் 26, 2025 01:09 AM

புதுடில்லி: ''பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொள்ள உள்ள மூன்று திட்டங்களால், ஒரு சொட்டு தண்ணீர் கூட அந்நாட்டுக்கு கிடைக்காது,'' என, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் கூறினார்.
ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது.
இது குறித்து மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது.
இதன்பின், கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர், சி.ஆர்.பாட்டீல் கூறியதாவது:
நேற்றைய கூட்டத்தில் மூன்று திட்டங்களை பின்பற்ற முடிவு செய்யப்பட்டது. அதாவது, நீண்ட கால திட்டம், குறுகிய கால திட்டம், நடுத்தர கால திட்டம் ஆகியவற்றை பின்பற்ற உள்ளோம். இந்த திட்டங்களை பின்பற்ற துவங்கி விட்டால், பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்திஉள்ளதை எதிர்த்து, அந்த நாடு உலக வங்கியிடம் முறையிட்டால், அதை சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயாராக உள்ளோம். நீண்ட கால திட்டங்களாக, அணைகளில் துார்வார முடிவு செய்யப்பட்டுள்ளது; புதிய அணை கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அணைகளில் புதிய நீர் மின் திட்டத்திற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஆறு மாத நோட்டீஸ் வழங்கி, புதிய நீர் மின் திட்டத்தை விரைந்து செயல்படுத்துவது உள்ளிட்ட பல முடிவுகள் எடுக்க, இந்த கூட்டத்தில் திட்டமிடப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

