'ஆப்பரேஷன் சிந்துார்' பெயரை கேட்டாலே பாக்., அலறும்!: ஜம்மு - காஷ்மீரில் பிரதமர் மோடி 'அட்டாக்'
'ஆப்பரேஷன் சிந்துார்' பெயரை கேட்டாலே பாக்., அலறும்!: ஜம்மு - காஷ்மீரில் பிரதமர் மோடி 'அட்டாக்'
UPDATED : ஜூன் 07, 2025 04:38 AM
ADDED : ஜூன் 07, 2025 02:20 AM

கத்ரா: ''நாட்டில் வகுப்புவாத கலவரங்களை துாண்டிவிட்டு, சுற்றுலாவை சார்ந்திருக்கும் ஏழை காஷ்மீரிகளின் வாழ்வாதாரத்தை கொள்ளை அடிக்கும் தீய நோக்கத்துடன், பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலை நடத்தியது. 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரை கேட்கும்போதெல்லாம், வெட்கக்கேடான தோல்வியை தழுவியது அந்நாட்டுக்கு நினைவுக்கு வரும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ஜம்மு - காஷ்மீரில் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில், தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி நடக்கிறது.
இங்கு ரியாசி மாவட்டத்தில் உள்ள கத்ரா என்ற இடத்தில், உலகின் மிக உயரமான, செனாப் ரயில் பாலத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.
மேலும், 46,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களையும் அவர் துவக்கி வைத்தார்.
கோழைத்தனம்
இதைத் தொடர்ந்து, கத்ராவில் நடந்த பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:
மனிதநேயம், சமூக நல்லிணக்கம் மற்றும் பொருளாதார செழிப்புக்கு எதிராக பாக்., செயல்படுகிறது.
ஏழை மக்கள் ரொட்டி - வெண்ணெய் சாப்பிடுவது அந்நாட்டுக்கு பிடிக்கவில்லை.
காஷ்மீர் மக்கள் நிம்மதியாக வாழ்வதை பொறுத்துக்கொள்ள முடியாத பாக்., ஏப்., 22ல், பஹல்காமில், சுற்றுலா தலத்தை குறிவைத்து கோழைத்தனமாக தாக்குதல் நடத்தியது.
ஜம்மு - காஷ்மீரில் செழித்து வரும் சுற்றுலா துறையை நாசப்படுத்தவே, இந்த தாக்குதலை பாக்., நடத்தியது.
இதனால், குதிரை சவாரி நடத்துபவர்கள், சுமை துாக்குபவர்கள், கடைக்காரர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
நம் மக்களை கொன்ற பாகிஸ்தானை, 'ஆப்பரேஷன் சிந்துார்' வாயிலாக நம் படைகள் கதிகலங்க வைத்தன.
அந்நாடு பல ஆண்டு காலமாக கட்டியமைத்த பயங்கரவாத முகாம்கள், தலைமையகங்களை, வெறும் 23 நிமிடங்களில், நம் படைகள் தரைமட்டமாக்கின. ஆப்பரேஷன் சிந்துார் என்ற பெயரை கேட்கும் போதெல்லாம், வெட்கக்கேடான தோல்வியே, பாகிஸ்தானுக்கு நினைவுக்கு வரும்.
பல ஆண்டு காலமாக, ஜம்மு - -காஷ்மீர் மக்கள் பயங்கரவாதத்தை தாங்கிக் கொண்டனர்.
இதனால் பலர், தங்கள் கனவுகளை கைவிட்டு வன்முறையை தலைவிதியாக ஏற்றுக்கொண்டனர். ஆனால் பா.ஜ., அரசு, இந்த யதார்த்தத்தை மாற்றி உள்ளது.
அதிகாரம்
ஜம்மு - -காஷ்மீர் இளைஞர்கள் மீண்டும் கனவு காணவும், அதை நிறைவேற்றவும் அரசு உதவுகிறது. ஜம்மு -- காஷ்மீரின் இளைஞர்கள் பயங்கரவாதத்திற்கு தகுந்த பதிலடி கொடுக்க முடிவு செய்துள்ளனர்.
உதம்பூர் - -ஸ்ரீநகர் - -பாரமுல்லா ரயில் பாதை திட்டம் புதிய, அதிகாரம் பெற்ற ஜம்மு - காஷ்மீரின் சின்னமாகவும், நாட்டின் வளர்ந்து வரும் வலிமையின் ஒரு பிரகடனமாகவும் உள்ளது.
செனாப் ரயில் பாலம், காஷ்மீரின் செழிப்புக்கான நுழைவாயில்களாக செயல்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.