காஷ்மீர் எல்லையில் பாக்.,ராணுவம் அத்துமீறல் : இந்திய ராணுவம் பதிலடி
காஷ்மீர் எல்லையில் பாக்.,ராணுவம் அத்துமீறல் : இந்திய ராணுவம் பதிலடி
ADDED : ஏப் 02, 2025 02:57 AM

ஸ்ரீநகர்: இந்தியா-பாகிஸ்தானின் காஷ்மீர் எல்லையில் பாக்.,ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது.
இந்தியா-பாகிஸ்தானின் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு பகுதியான ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் கே.ஜி., செக்டர் என்ற இடத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நேற்று பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. உடன் சுதாரித்து கொண்ட இந்திய ராணுவமும் எதிர்தாக்குதல் நடத்தியது. இதில் இரு தரப்பிலும் பயங்கர துப்பாக்கிச்சண்டை நடந்ததாக தகவல் தெரிவிக்கி்ன்றன.
கடந்த மார்ச்.31-ம் தேதியன்று கத்துவாவில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் உள்ள பகுதிகளில் ராணுவம், உள்ளூர் போலீஸ் படையினர், மத்திய ரிசர்வ்படையினர் கூட்டாக தேடுதல் வேட்டை நடத்தியதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக நேற்று சர்வதேச எல்லையில் பாக்., ராணுவம் அத்துமீறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று பாகிஸ்தான் ராணுவ அத்துமீறல் சம்பவத்தையடுத்து அங்கு கூடுதலாக ராணுவத்தினர் குவிக்கப்பட்டு எல்லையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.