சர்வதேச எல்லையில் பாகிஸ்தானிய ஊடுருவல்காரர் மீது துப்பாக்கிச் சூடு; எல்லை பாதுகாப்பு படையினர் அதிரடி
சர்வதேச எல்லையில் பாகிஸ்தானிய ஊடுருவல்காரர் மீது துப்பாக்கிச் சூடு; எல்லை பாதுகாப்பு படையினர் அதிரடி
ADDED : ஆக 11, 2025 07:44 PM

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் கதுவாவில் சர்வதேச எல்லையில் பாகிஸ்தானிய ஊடுருவல்காரர் மீது எல்லைப் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர், காயமடைந்த நிலையில் பாகிஸ்தானிய ஊடுருவல்காரர் கைது செய்யப்பட்டார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்திய ராணுவம் எல்லைப் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கத்துவா மாவட்டத்தின் சந்த்வான், கோதே எல்லைப்பகுதியில், இன்று மாலை 4 மணிக்கு பாகிஸ்தானை சேர்ந்த அந்த நபர் சர்வதேச எல்லையைக் கடந்து ஊடுருவ முயற்சி செய்ததை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர்.
இதையடுத்து, அவர் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஊடுருவ முயன்ற நபர் காயம் அடைந்தார். காயமடைந்த ஊடுருவல்காரர் கைது செய்யப்பட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அந்த நபர் யார்? எதற்காக இந்தியாவிற்குள் அத்துமீறி நுழைய முயற்சி செய்தார் என்பது குறித்து விசாரணை நடைபெற இருக்கிறது. விசாரணை முடிவில்தான் அவர் ஏன் ஊடுருவ முயன்றார் என்பது தெரியவரும்.
'ஊடுருவல்காரர் எல்லை பாதுகாப்பு படையினர் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் கவனிக்கவில்லை. இதனால், பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்' என அதிகாரிகள் தெரிவித்தனர்.