பீஹாரில் 65 ஆண்டுகளாக சட்ட விரோதமாக வசிக்கும் பாகிஸ்தானியர்
பீஹாரில் 65 ஆண்டுகளாக சட்ட விரோதமாக வசிக்கும் பாகிஸ்தானியர்
ADDED : ஆக 24, 2025 11:43 PM

பாட்னா: பீஹாரின் பஹல்பூர் மாவட்டத்தில் கடந்த 65 ஆண்டுகளாக வசித்து வந்த இரு பாகிஸ்தானியர் அடையாளம் காணப் பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த தீவிர பணி மூலம் இது தெரிய வந்துள்ளது.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கடந்த ஜூலை மாதம் தேர்தல் கமிஷன், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த தீவிர பணியை மேற்கொண்டது.
அதில், 65 லட்சம் பேர் நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த தீவிர பணியின் போது பஹல்பூரில் வசித்து வந்த இம்ரானா கானம் மற்றும் பிர்தோஷியா கானம் இருவரும், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ரங்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு தேர்தல் அதிகாரிகள் கொண்டு சென்றனர். அதன் அடிப்படையில், அவர்களது ஆவணங்களை சரிபார்த்தபோது, இருவரும் 1956ல் இந்தியாவுக்கு வந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
மேலும், விசா காலம் முடிவடைந்தும் இந்தியாவை விட்டு வெளியேறாமல் பஹல்பூரிலேயே தங்கியிருந்து, ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெற்றதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இருவரின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ரத்து செய்யப்பட்டன.
பூத் முகவர்கள் வாயிலாகவும் இரு பாகிஸ்தானியரின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதாக கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான நவால் கிஷோர் சிங் கூறினார்.
ஆதார் அடையாள அட்டையை நம்பகமான ஆவணமாக எடுத்துக்கொள்ள முடியாது என தேர்தல் கமிஷன் கூறி வந்தது. இந்தச் சூழலில், இரு பாகிஸ்தானியர், மோசடி ஆவணங்களை வைத்து ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை வரை பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பீஹாரில் 1.8 சதவீதம் மட்டுமே நீக்கம்
புதுடில்லி, ஆக. 25-
'பீஹாரில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியில் 1.8 சதவீதம் பேர் மட்டுமே நீக்கப்பட்டுள்ளனர்' என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
இது குறித்து நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்காக இதுவரை 98.2 சதவீத வாக்காளர்களிடம் இருந்து ஆவணங்கள் பெறப் பட்டுள்ளன. இதையடுத்து, 1.8 சதவீதம் பேர் மட்டுமே பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதில், 0.16 சதவீதம் பேரிடம் இருந்து மட்டுமே ஆட்சேபம் வந்துள்ளது.
திருத்தம் செய்வதற்கா ன காலக்கெடு செப்., 1ம் தேதியுடன் முடிகிறது. எனவே, எஞ்சிய 1.8 சதவீத வாக்காளர்கள் தங்களது ஆவணங்களை சமர்ப்பித்தா ல், ஆய்வு செய்யப்பட்டு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.