நேபாளம் வழியாக பீஹாருக்குள் பாக்., பயங்கரவாதிகள்... ஊடுருவல் ! உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து உச்சகட்ட பாதுகாப்பு
நேபாளம் வழியாக பீஹாருக்குள் பாக்., பயங்கரவாதிகள்... ஊடுருவல் ! உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து உச்சகட்ட பாதுகாப்பு
ADDED : ஆக 29, 2025 12:46 AM

பாட்னா: பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் நேபாளம் வழியாக பீஹாருக்குள் நுழைந்துள்ளதாக நம் உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதைத் தொடர்ந்து, பீஹார் முழுதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கஉள்ளது. இதை முன்னிட்டு, தற்போதே அங்கு தேர்தல் பிரசாரம் களைகட்டி உள்ளது.
நம் அண்டை நாடான நேபாளத்துடன், 729 கி.மீ., துார திறந்தவெளி எல்லையை பீஹார் பகிர்ந்து கொள்கிறது.
இந்த எல்லையில், பீஹாரின் மதுபானி, சீதாமர்ஹி, சுபால், அராரியா, கிழக்கு மற்றும் மேற்கு சம்பாரண் உள் ளிட்ட ஏழு மாவட்டங்கள் உள்ளன. இந்த எல்லைப் பகுதி வழியாக, சட்ட விரோத ஊடுருவல் அதிகரித்து வருகிறது.
அறிவுறுத்தல் இந்நிலையில், நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இயங்கும் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள், நேபாள தலைநகர் காத்மாண்டு வழியாக, பீஹாரின் அராரியா மாவட்டத்துக்குள் நுழைந்துள்ளதாக நம் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, உளவுத்துறை வட்டாரங்கள் கூறியதாவது:
பீஹாருக்குள் நுழைந்த ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
பாகிஸ்தானின் ராவல்பிண்டியைச் சேர்ந்த ஹஸ்னைன் அலி, உமர்கோட்டைச் சேர்ந்த அடில் ஹுசைன், பஹவல்பூரைச் சேர்ந்த முகமது உஸ்மான் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த மூன்று பேரும், ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் காத்மாண்டுவுக்கு வந்து, அங்கிருந்து அராரியாவுக்கு கடந்த வாரம் வந்துள்ளனர். மூன்று பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளி யிடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக பீஹார் போலீசாருக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டு, கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
உளவுத் துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து, பீஹார் முழுதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. முன்னெச்சரிக்கையாக, ராஜ்கிர், போத்கயா, பாட்னா உள்ளிட்ட இடங்களில், முக்கிய நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா தலங்களைச் சுற்றி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சன்மானம் மஹாபோதி கோவில், விஸ்வ சாந்தி ஸ்துாபி, மஹாவீர் கோவில், தகாத் ஸ்ரீ ஹரிமந்திர், பாட்னா சாஹிப் போன்ற சுற்றுலாப் பயணியர் அதிகம் வரும் இடங்களில், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
மேலும், மாநிலத்தின் அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இது குறித்து, பீஹார் போலீஸ் டி.ஜி.பி., வினய் குமார் கூறுகையில், ''மாநிலம் முழுதும் பொது எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
''பாதுகாப்பை அதிகரித்து கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி, அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், ரோந்து பணி, வாகன தணிக்கை மற்றும் தேடுதல் பணிகளை அதிகரிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.
இதற்கிடையே, பாகிஸ்தானின் மூன்று பயங்கரவாதிகளின் புகைப்படங்களை வெளியிட்ட கிழக்கு சம்பாரண் மாவட்ட போலீசார், அவர்களை பற்றி தகவல் அளிப்போருக்கு, 50,000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என, அறிவித்துள்ளனர்.