என் கணவரை மீட்டு தாருங்கள் பிரதமர் மோடிக்கு பாக்., பெண் வேண்டுகோள்
என் கணவரை மீட்டு தாருங்கள் பிரதமர் மோடிக்கு பாக்., பெண் வேண்டுகோள்
ADDED : டிச 08, 2025 12:11 AM

இஸ்லாமாபாத்: 'என் கணவர் டில்லியில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதால், அதை தடுத்து எனக்கு நீதி கிடைக்க இந்திய பிரதமர் உதவிட வேண்டும்' என, பாகிஸ்தான் பெண் ஒருவர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, நம் அண்டை நாடான பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்த நிகிதா நாக்தேவ் என்பவர் வெளியிட்டுள்ள 'வீடியோ'வில் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தானைச் சேர்ந்தவர் விக்ரம் நாக்தே வ். இவர், நீண்டகால விசாவில் இந்தியாவின் மத்திய பிரதேச மாநி லத்தின் இந்துாரில் வசித்து வருகிறார். இவருக்கும், எனக்கும் கடந்த 2020 ஜனவரியில் பாகிஸ்தானின் கராச்சியில் திருமணம் நடந்தது. ஒரு மாதத்திற்கு பின், இந்தியாவுக்கு என்னை விக்ரம் அழைத்து வந்தார்.
அதே ஆண்டு ஜூலையில் விசா சிக்கலை காரணம் காட்டி, என்னை கட்டாயப்படுத்தி அட்டாரி எல்லையில் விட்டுவிட்டதால், நான் மீண்டும் பாகிஸ்தானுக்கு வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டேன்.
இந்நிலையில், தற்போது என் கணவர் டில்லியைச் சேர்ந்த பெண்ணை இரண்டாவது திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத் துள்ளது.
இந்தியா வில் உள்ள பெண்கள் ஒவ்வொருவரும் நீதிக்கு தகுதியானவர்கள். இன்று நீதி வழங்கப்படாவிட்டால், நீதியின் மீதான நம்பிக்கையை பெண்கள் இழக்க நேரிடும்.
எனவே, பிரதமர் மோடி தலையீட்டு எனக்கு நீதி கிடைக்க உதவ வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
விக்ரம் , டில்லியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய தயாராகி வருவதை அறிந்த நிகிதா, சட்டப்பூர்வமாக புகார் ஒன்றை, மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிந்தி பஞ்ச் மத்தியஸ்தம் மற்றும் சட்ட ஆலோசனை மையத்தில் கடந்த ஜனவரி 27ல் அளித்துள்ளார். மேலும், இந்துார் சமூக பஞ்சாயத்து அமைப்பிடமும், கடந்த மே மாதம் புகார் அளித்துள்ளார்.
நிகிதா அளித்த புகாரின் அடிப்படையில், சிந்தி பஞ்ச் சட்ட ஆலோசனை மையம் இந்த வழக்கை விசாரித்தது.
இருவருமே இந்திய குடிமக்கள் இல்லாததால், இந்த வழக்கு பாகிஸ்தானின் அதிகார வரம்புக்குள் வருவதாக மத்தியஸ்த மையம் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், விக்ரமின் விசா குறித்து சந்தேகம் எழுந்துள்ளதால், அவர் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட வேண்டும் எனவும் அந்த மையம் பரிந்துரைத்துள்ளது.
இதேபோல், இந்துார் சமூக பஞ்சாயத்து அமைப்பும் விக்ரமை நாடு கடத்த பரிந்துரைத்துள்ளது-.

