ADDED : நவ 20, 2024 12:37 AM

பாலக்காடு; பாலக்காடு சட்டசபை இடைத்தேர்தலில் இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. வரும், 23ம் தேதி ஓட்டு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
கேரள மாநிலம், பாலக்காடு காங்., எம்.எல்.ஏ., ஷாபி பரம்பில், லோக்சபா தேர்தலில் எம்.பி.,யானார்.
இதையடுத்து, இன்று (20ம் தேதி) பாலக்காடு சட்டசபை இடைத்தேர்தல் நடக்கிறது.
இடைத்தேர்தலில் காங்., வேட்பாளராக ராகுல் மாங்கூட்டம், மா.கம்யூ. கட்சி ஆதரவில் சுயேட்சை வேட்பாளராக சரின், பா.ஜ., வேட்பாளராக கட்சியின் மாநிலச் செயலாளர் கிருஷ்ணகுமார் உட்பட 10 பேர் போட்டியிடுகின்றனர்.
இறுதி வாக்காளர் பட்டியலின்படி தொகுதியில், மொத்தம் 1,94,706 வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு செய்ய உள்ளனர். இதில் 1,00,290 பேர் பெண்கள் வாக்காளர்கள்.
வாக்காளர்களின் 85 வயதிற்கு மேலான 2,306 பேரும், மாற்றுத்திறனாளிகள் 780 பேரும், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 4 பேரும் உள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் முதல் முறையாக வாக்களிக்கும் 2,445 பேரும் இடம் பிடித்துள்ளனர். இந்நிலையில் இடைத்தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் செய்து முடித்துள்ளது. மொத்தம் 184 ஓட்டுச்சாவடிகள் தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ளன.
இன்று காலை, 7:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட ஓட்டுச்சாவடி பொருட்கள், அரசு விக்டோரியா கல்லூரியில் இருந்து, நேற்று போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த ஓட்டுச்சாவடிக்கு அனுப்பப்பட்டது.
ஓட்டுப்பதிவு முடிந்த பின், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மண்டலம் வாரியாக சேகரிக்கப்பட்டு, ஓட்டு எண்ணும் மையமான அரசு விக்டோரியா கல்லுாரிக்கு கொண்டு வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஓட்டு எண்ணும் மையத்தில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் 'ஸ்டிராங் ரூமில்' வைத்து அந்த அறைக்கு, அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் 'சீல்' வைக்கப்படும்.
ஓட்டு எண்ணிக்கை செய்வதற்கு மற்றொரு அறையில் தடுப்புகள் அமைத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஓட்டு எண்ணும் மையம் முழுவதும், கண்காணிப்பு கேமரா பொருத்தி, கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. வரும், 23ம் தேதி காலை, 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்க உள்ளது. ஓட்டு எண்ணும் மையம் முழுவதும், மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் மூன்றடுக்கு பாதுகாப்பு அமைத்துள்ளனர்.