தரவரிசையில் பாலக்காடு கோட்டம் முதலிடம் ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
தரவரிசையில் பாலக்காடு கோட்டம் முதலிடம் ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
ADDED : ஏப் 01, 2025 09:13 PM
பாலக்காடு:ரயில்வேயின் முக்கிய செயல்திறன் தரவரிசையில், பாலக்காடு ரயில்வே கோட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
பாலக்காடு ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
பயணியரின் பாதுகாப்பு, வருவாய், செலவு கட்டுப்பாடு மற்றும் நேரம் தவறாமை போன்ற காரணிகளின் அடிப்படையில், ரயில்வே கோட்டங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டு உள்ளது. இதில், ஐந்தாம் இடத்தில் இருந்த பாலக்காடு ரயில்வே கோட்டம், தற்போது முதல் இடத்தை பிடித்துள்ளது.
2025 பிப்., மாத நிலவரப்படி, மொத்த வருவாய் ரூ.1607.02 கோடி. முந்தைய ஆண்டை விட 36.5 சதவீதம் வருவாய் அதிகரித்துள்ளது. பார்சல், சரக்கு சேவை உள்ளிட்ட வருவாயும் அதிகரித்துள்ளது. இதன் வாயிலாக, 583.37 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
சொரணூர், நிலம்பூர் பிரிவில், தற்போது 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்டுள்ளது. டீசல் என்ஜின்கள் பயன்பாடு குறைத்து, ஆற்றல் திறனை அதிகரிப்பதன் வாயிலாக இந்த சாதனை பெற முடிந்தது.
ரயில்வே கோட்டத்தின் கீழ், பல்வேறு ரயில்வே ஸ்டேஷன்களில் நடைமேடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. சொரணுார், நிலம்பூர் பிரிவில் அதிகபட்ச வேகம் மணிக்கு 85 கி.மீ., என, அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது, வேகமான ரயில் போக்குவரத்தையும், சிறந்த இணைப்பையும் உறுதி செய்கிறது. இயந்திரங்கள், பெட்டிகள், வேகன்கள் மற்றும் உட்கட்டமைப்பு ஆகியவற்றின் திறமையான பயன்பாடு செயல்பாட்டு உற்பத்தித்திறனை அதிகரித்துள்ளது.
கேட்டரிங், வாகன நிறுத்துமிடங்கள், ஏ.சி., காத்திருப்பு அறைகள், பயணியரின் வசதியை அதிகரித்துள்ளன. தூங்கும் இடம், சுகாதார பிரிவுகள், மொபைல்போன் சார்ஜிங் பிரிவுகள், டிஜிட்டல் லாக்கர்கள், என, புதிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தண்டவாள மேம்பாடுகள், பராமரிப்பு, பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் முன்கூட்டியே தண்டவாள பழுதுபார்ப்புகள் மேற்கொள்ளப்பட்டது. இது போன்ற அம்சங்களால், சாதிக்க முடிந்தது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

