பாலக்காடு ஸ்மார்ட் சிட்டி திட்டம்; கேரள அரசு ரூ.1,710 கோடி செலவு
பாலக்காடு ஸ்மார்ட் சிட்டி திட்டம்; கேரள அரசு ரூ.1,710 கோடி செலவு
ADDED : செப் 24, 2024 11:49 PM
பாலக்காடு : பாலக்காடு ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான, மாநிலத்தின் முழு பங்கு தொகையும் செலவிடப்பட்டதாக தொழில் துறை அமைச்சர் ராஜீவ் தெரிவித்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு, கஞ்சிக்கோடு சுள்ளிமடை அருகே, தொழில் வழித்தடத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்படும் ஸ்மார்ட் சிட்டிக்கு கையகப்படுத்திய பகுதியை, தொழில்துறை அமைச்சர் ராஜீவ் பார்வையிட்டார்.
அப்போது, அவர் கூறியதாவது:
கொச்சி - -பெங்களூரு தொழில் வழித்தடத்தின் ஒரு பகுதியாக, பாலக்காடு ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் மாநிலத்தின் முழு பங்கும் செலவிடப்பட்டுள்ளது. மத்திய அரசு நிதி அனுமதித்ததும், தொடர் வளர்ச்சி பணிகள் துவங்கப்படும்.
மத்திய அரசும், கேரள அரசும், தலா 50 சதவீத செலவை பகிர்ந்து கொள்ளும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. கேரள அரசு, 1,710 கோடி ரூபாய் செலவு செய்து நிலம் கையகப்படுத்தும் பணியை முடித்துள்ளது.
புதுச்சேரியில் இன்னும், 240 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டி உள்ளது. இதற்கு தேவையான நிதியை திட்ட வரவு செலவுத் தொகையுடன் சேர்த்து, கேரள அரசே வழங்கும். நிலம் கையகப்படுத்தும் பணி, டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும்.
அக்., 1ம் தேதி மத்திய அரசு பிரதிநிதிகளும், திட்ட தலைமை இணைச் செயலாளரும், திட்ட பகுதியை பார்வையிட்டு பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். மத்திய அரசு ஒரே கட்டமாக நிதியை அளித்தால், அதன்படி செயல்பட கேரளா அரசு தயாராக உள்ளது. ஒவ்வொரு கட்டமாக மத்திய அரசு நிதி அளித்தால், அதற்கேற்ப நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மின்சாரத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி, மலம்புழா எம்.எல்.ஏ., பிரபாகரன், கலெக்டர் சித்ரா ஆகியோர் உடனிருந்தனர்.