போக்குவரத்துக்கு தயாராகும் பாம்பன் புதிய ரயில் பாலம்
போக்குவரத்துக்கு தயாராகும் பாம்பன் புதிய ரயில் பாலம்
ADDED : பிப் 23, 2024 04:03 AM

புதுடில்லி: தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தின் மண்டபத்தில் இருந்து ராமேஸ்வரம் தீவை இணைக்கும் பழைய ரயில் பாலம், 1913ல் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது.
ரயில் பாலம் பலவீனம் அடைந்ததை தொடர்ந்து, அதன் அருகிலேயே புதிய ரயில் பாலம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டது.
கடந்த, 2019, நவம்பரில், புதிய பாலத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதற்கிடையே, 2022, டிச., 23ல் பழைய ரயில் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
புதிய பாலம் கட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ரயில்வே வாரிய தலைவர் ஜெயா வர்மா சின்ஹா பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின் அவர் கூறியதாவது:
புதிய பாம்பன் ரயில் பாலம் கட்டும் பணிகள் மிக சிறப்பாக நடந்து வருகின்றன. பாலத்தின் இடையே கப்பல் போக்குவரத்துக்கான பகுதி, 'லிப்ட்' போல மேல் நோக்கி செல்லும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது போன்ற வடிவமைப்புடைய பாலம் நாட்டில் முதல்முறையாக கட்டப்பட்டுள்ளது. இருவழி ரயில் போக்குவரத்து வசதி உடைய 2 கி.மீ., துாரம் நீள பாலம், விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.