'பாஷினி'யுடன் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
'பாஷினி'யுடன் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : ஜூன் 19, 2025 07:09 PM
புதுடில்லி:மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் நிகழ்ச்சிகளை ஒரே நேரத்தில், பல மொழிகளில் பார்க்கும் வசதி செய்யும் இணையதளத்தை உருவாக்குவது தொடர்பாக, 'பாஷினி' என்ற மத்திய அரசின் நிறுவனத்துடன், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதற்கான நிகழ்ச்சி, டில்லியில் நேற்று நடந்தது. அதில் பேசிய பஞ்சாயத்து ராஜ் இணையமைச்சர் எஸ்.பி.சிங் பாஹல் பேசியதாவது:
நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆங்கிலம் தெரியவில்லையே என்ற எண்ணத்தை பஞ்சாயத்து தலைவர்கள் விட்டொழிக்க தேவையானவற்றை நாம் செய்துள்ளோம். மொழி தொடர்பான பதற்றத்தை குறைத்து, மொழியால் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள பிரிவினையை இணைக்க முயற்சிக்கிறோம்.
எந்த அரசியல்வாதியும், ஓட்டு சேகரிக்கும் போது, ஆங்கிலத்தில் பேசுவதில்லை. அந்த நேரத்தில், ஆங்கிலம் உயர் வகுப்பினரின் மொழியாக அவர் கருதுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பஞ்சாயத்து ராஜ் துறையின் செயலர் விவேக் பரத்வாஜ் கூறும் போது, ''மொழிகள் தான் மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துகிறது. பாஷினி வாயிலாக அந்த பிரிவினை சரி செய்யப்படுகிறது,'' என்றார்.
பாஷினிக்கும், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்திற்கும் இடையே நேற்று ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், மூன்று ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.