கேரள உயர் நீதிமன்ற உத்தரவை மீறிய ஊராட்சி செயலர் 'சஸ்பெண்ட்'
கேரள உயர் நீதிமன்ற உத்தரவை மீறிய ஊராட்சி செயலர் 'சஸ்பெண்ட்'
ADDED : அக் 02, 2024 08:12 PM
மூணாறு:சின்னக்கானல் ஊராட்சி செயலர் கேரள உயர் நீதிமன்ற உத்தரவை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் செயல்பட அனுமதி அளித்ததால் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
இடுக்கி மாவட்டத்தில் உள்ளாட்சி துறை விஜிலன்ஸ் பிரிவு அதிகாரிகள் விதிமுறை மீறி நடந்த கட்டுமானங்கள் குறித்து பரிசோதனை நடத்தினர். அதில் தேவிகுளம், உடும்பன்சோலை, பீர்மேடு தாலுகாக்களில் வருவாய்துறை, ஊராட்சி நிர்வாகம் பணிகளை நிறுத்துமாறு உத்தரவிட்டும், அதனை மீறி 57 கட்டுமானங்கள் நடந்ததாக தெரியவந்தது.
அதில் மூணாறு அருகில் உள்ள சின்னக்கானல் ஊராட்சியில் ஏழு கட்டுமானங்கள் நடந்தன. 57 கட்டுமானங்களின் பணிகளை நிறுத்துமாறும், அவற்றை பயன்படுத்த தடை விதிக்குமாறும் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட கட்டடங்கள் தொடர்பான வழக்குகளில் தொடர் நடவடிக்கை எடுக்கவும், உயர் நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்யவும் சின்னக்கானல் உட்பட ஏழு ஊராட்சிகளின் செயலர்களுக்கு, கடந்தாண்டு செப்., 25ல் அன்றைய கலெக்டர் ஷீபா ஜார்ஜ் உத்தரவிட்டார்.
சஸ்பெண்ட்
இந்நிலையில், சின்னக்கானல் ஊராட்சியில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி கட்டப்பட்ட ஐந்து கட்டடங்களுக்கு செயலர் மதுசூதனன் உன்னித்தான் 'லைசென்ஸ்' வழங்கியதுடன், அவை செயல்படவும் அனுமதி அளித்தார்.
முறைகேடு, விதிமுறை மீறல், ஒழுக்கமின்மை, அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றில் ஈடுபட்டதாக கூறி மதுசூதனன் உன்னித்தானை உள்ளாட்சித்துறை முதன்மைச் செயலாளர 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.