ADDED : மார் 07, 2024 03:50 AM

தட்சிண கன்னட மாவட்டம், பல அற்புதங்கள், புராதன சிறப்புகளை தன்னுள்ளே மறைத்து வைத்துள்ளது. பல்வேறு அற்புதங்கள் இன்னும் வெளிச்சத்துக்கு வரவில்லை. அதில் கத்ரிகுட்டே பாண்டவர் குகையும் ஒன்றாகும்.
தட்சிண கன்னடா மங்களூரின் கத்ரிக்கும், பல ஆயிரக் கணக்கான ஆண்டுகள் முந்தைய மஹாபாரதத்துக்கும், நெருங்கிய தொடர்பு உள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும். கத்ரி யோகேஸ்வர மடம் உள்ள கத்ரிகுட்டேவில், பாண்டவர் குகை உள்ளது. மடத்தின் முன் பகுதியில் படிகளில் இறங்கிச் சென்றால், இந்த குகையை அடையலாம்.
பாண்டவர் குகைக்குள் சென்றவர்கள், மீண்டும் திரும்பி வர மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்கு முன்பு யோகேஸ்வர மடத்தின் சித்தயோகிகள், இந்த குகைக்குள் தவம் செய்தனராம். இப்போதும் கூட, சிலர் குகைக்குள் தவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குகையின் மேற்கூரை இடிந்துவிடாமல் தடுக்க, கான்கிரீட் போடப்பட்டுள்ளது. சிமென்ட் படிகள் கட்டப்பட்டுள்ளன. இப்பகுதியில், தொல்லியல் துறை தகவல் பலகை வைத்துள்ளது. சுற்றுலா பயணியர், குகை குறித்து தகவல் தெரிந்து கொண்டு, இதை காண ஆர்வத்துடன் வருகின்றனர்.
ஒரு நபர் குனிந்து உள்ளே செல்லும் வகையில், நுழைவு வாசல் உள்ளது. இரண்டு நுழைவு வாசல்கள் உள்ளன. இந்த குகையின் இடது, வலதுபுறத்தில் மேலும் இரண்டு சிறு குகைகள் உள்ளன. குகையின் நுழைவு வாசலில் பாத அடையாளங்கள் தென்படுகின்றன. கவுரவ குலத்தின் துரியோதனன் சதியால், நாட்டை இழந்து வனவாசம் சென்ற பாண்டவர்கள், இந்த குகையில் தங்கி ஓய்வெடுத்ததாக கருதப்படுகிறது. இதை உறுதி செய்யும் அடையாளங்கள் குகையின் நுழைவு வாசலில் உள்ளன.
தட்சிண கன்னடாவுக்கு வரும் சுற்றுலா பயணியர், பாண்டவர் குகையை பற்றி தெரிந்து கொண்டு, இங்கு வருகின்றனர். மனதுக்கு இதமளிக்கும் காட்சிகளை பார்த்து ரசிக்கின்றனர். குகையை வியப்புடன் பார்க்கின்றனர்.

