ADDED : மார் 16, 2024 11:19 PM

சபரிமலை : கேரள மாநிலம், சபரிமலையில் தற்போது பங்குனி மாத பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, மார்ச் 13 மாலை நடை திறக்கப்பட்டு, 14 அதிகாலை முதல் பூஜைகள் நடக்கின்றன.
பங்குனி மாதத்தில் நடைபெறும் பத்து நாள் உத்திர திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை, 9:30 மணிக்கு தந்திரி மகேஷ் மோகனரரு தங்க கொடிமரத்தில் கொடியேற்றிய போது பக்தர்கள், 'சுவாமியே சரணம் ஐயப்பா' என்று கோஷம் எழுப்பினர்.
திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த், தேவசம்போர்டு நிர்வாகிகள் பங்கேற்றனர். இன்று முதல் மார்ச் 24 வரை தினமும் மதியம் உற்சவ பலி நடைபெறும். மார்ச் 20 முதல் 24 வரை இரவு, 9:00 மணிக்கு யானை மீது சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும்.
மார்ச் 24 இரவில் சரங்குத்தியில் பள்ளி வேட்டை நடைபெறும். மார்ச் 25 காலை, 11:30 மணிக்கு பம்பையில் ஆராட்டு நடைபெறும். ஆராட்டு பவனி சன்னிதானம் திரும்பியதும் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறும். தொடர்ந்து நடை அடைக்கப்படும்.

