ADDED : ஜன 20, 2025 01:55 AM

பணஜி: கோவாவில், 'பாராகிளைடிங்' சாகச பயணத்தின்போது நிகழ்ந்த விபத்தில் சிக்கி, 27 வயது பெண் சுற்றுலா பயணி மற்றும் பயிற்சியாளர் உயிரிழந்தனர்.
மஹாராஷ்டிராவின் புனேயைச் சேர்ந்தவர் ஷிவானி தாபலே, 27. கோவாவிற்கு தன் நண்பர்களுடன் சமீபத்தில் சுற்றுலா வந்தார்.
அங்குள்ள கேரி கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தின் பாராகிளைடிங் ரைடு செல்ல ஷிவானி விரும்பினார். இதையடுத்து, அந்நிறுவனம் சார்பில், நம் அண்டை நாடான நேபாளத்தைச் சேர்ந்த சுமால் நேபாளி, 26, என்ற பயிற்சியாளர் ஷிவானியுடன் சென்றார்.
அங்குள்ள மலை உச்சியில் இருந்து பாராகிளைடிங்கில் இருவரும் சாகச பயணத்தை நேற்று முன்தினம் மேற்கொண்டனர்.
புறப்பட்ட சில நிமிடங்களில் எதிர்பாராதவிதமாக ஷிவானி சென்ற பாராகிளைடிங் அங்குள்ள பள்ளத்தாக்கில் சிக்கி விபத்துக்குள்ளானது.
இதன் காரணமாக அந்த பெண்ணும், பயிற்சியாளரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பாராகிளைடிங் பயணத்திற்கு ஏற்பாடு செய்த நிறுவனம் சட்டவிரோதமாக இயங்கியது தெரியவந்தது.
இதையடுத்து, அந்நிறுவனத்தின் உரிமையாளர் சேகர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.