துமகூரில் புதிய விமான நிலையம் சிவகுமாருக்கு பரமேஸ்வர் 'செக்'
துமகூரில் புதிய விமான நிலையம் சிவகுமாருக்கு பரமேஸ்வர் 'செக்'
ADDED : ஜன 26, 2025 10:54 PM
துமகூரு: ''துமகூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும்,'' என்று அரசுக்கு, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கோரிக்கை வைத்துள்ளார்.
பெங்களூரு ரூரல் தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்நிலையில் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, பெங்களூரு அருகில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக பெங்களூரு ரூரல் பகுதிகளான டாபஸ்பேட், நெலமங்களா, குனிகல், பிடதி உள்ளிட்ட பகுதிகளில் நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், ககலிபுராவிலும் விமான நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகஇரண்டு நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது.
ககலிபுரா, துணை முதல்வர் சிவகுமாரின் தொகுதியான கனகபுராவிலிருந்து 30 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது. சிவகுமார் தனது செல்வாக்கை பயன்படுத்தி, தனது ஊருக்கு அருகில் விமான நிலையம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் நேற்று அளித்த பேட்டி:
துமகூரில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளேன். வசந்த நரசாபுராவில் 3,000 ஏக்கர் நிலத்தை நாங்கள் அடையாளம் கண்டு உள்ளோம். இங்கு விமான நிலையம் அமைத்தால் துமகூரு மக்களுக்கு பயன் அளிக்கும்.
மாநிலத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும்படியும் முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளேன். அங்கீகரிக்கப்படாத மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களை கண்டறியும் படி மாவட்ட கலெக்டர்களுக்கு நாங்கள் உத்தரவிட்டு உள்ளோம்.
துமுல் பால் கூட்டுறவு சங்கத்திற்கு தலைவர் தேர்வு செய்யப்பட்ட விவகாரத்தில் எனது பங்களிப்பு எதுவும் இல்லை. எங்கள் கட்சி எம்.எல்.ஏ., சீனிவாஸ் கூறியபடி, துமகூரில் துக்ளக் தர்பார் எதுவும் நடக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு துமகூரில் விமான நிலையம் அமைக்க இடம் இல்லை என்று பரமேஸ்வர் கூறியிருந்தார். தற்போது இடத்தை கண்டறிந்து இருப்பதாக கூறியிருக்கிறார். இதன்மூலம் சிவகுமார் ஊரின் அருகில் விமான நிலையம் வரக்கூடாது என்பதில் அவர் ஒரு முடிவுடன் இருப்பதாக சொல்லப்படுகிறது.

