பெற்றோர்- - ஆசிரியர் மெகா சந்திப்பு: ஆந்திராவில் 2 கோடி பேர் பங்கேற்பு
பெற்றோர்- - ஆசிரியர் மெகா சந்திப்பு: ஆந்திராவில் 2 கோடி பேர் பங்கேற்பு
ADDED : ஜூலை 11, 2025 04:51 AM

அமராவதி: ஆந்திராவில், இரண்டு கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்ற பெற்றோர்- - ஆசிரியர் சந்திப்பை நடத்தி முதல்வர் சந்திர பாபு நாயுடு சாதனை படைத்துள்ளார்.
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், தெலுங்கு தேசம், பாஜ., ஜனசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.
அங்கு, தேர்தலுக்கு முன் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில், 'தள்ளிக்கி வந்தனம்' என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. பள்ளி செல்லும் பிள்ளைகளின் தாயார் வங்கிக்கணக்கில் ஆண்டுதோறும், 15,000 ரூபாய் வரவு வைக்கப்படுவதே அத்திட்டம்.
இதில், 13,000 ரூபாய் தாய்க்கும், 2,000 ரூபாய் பள்ளியின் கட்டமைப்புக்கும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், அந்தப் பணத்தை பள்ளிக்கு செலவிடுவது மற்றும் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துவது தொடர்பாக, முதல்வர் சந்திரபாபு நாயுடு மெகா பெற்றோர்- - ஆசிரியர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்.
ஆந்திரா முழுதும் உள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 2.28 கோடிக்கும் அதிகமான பெற்றோர்- - ஆசிரியர் இதில் பங்கேற்றனர்.
ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் கோத்தசெருவில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளியில் நடந்த சந்திப்பில், சந்திரபாபு நாயுடு, கல்வி அமைச்சர் நாரா லோகேஷ் பங்கேற்றனர். அப்போது சந்திரபாபு ஆசிரியராக மாறி, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, 'வளங்கள்' என்ற தலைப்பிலான பாடத்தை, 45 நிமிடங்கள் கற்பித்தார்.
கல்வி அமைச்சர் நாரா லோகேஷ் மாணவர்களுடன் அமர்ந்து வகுப்பை கவனித்தார்.
மாணவர்களின் கல்விமுறை, ரேங்க் கார்டு ஆகியவற்றை ஆய்வு செய்த முதல்வர், கல்வியை சரியாக நடைமுறைப்படுத்தினால் மட்டுமே புதிய கண்டுபிடிப்புகள் சாத்தியமாகும் என்று பெற்றோர் -- ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இரண்டு கோடிக்கும் அதிகமான பெற்றோர் -- ஆசிரியர் பங்கேற்ற இந்த சந்திப்பை, கின்னஸ் சாதனை முயற்சிக்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.