சமூக வலைதளங்களில் குழந்தைகள் கணக்கு துவங்க பெற்றோர் அனுமதி தேவை; மத்திய அரசு முடிவு
சமூக வலைதளங்களில் குழந்தைகள் கணக்கு துவங்க பெற்றோர் அனுமதி தேவை; மத்திய அரசு முடிவு
UPDATED : ஜன 04, 2025 03:41 PM
ADDED : ஜன 03, 2025 10:30 PM

புதுடில்லி: சமூக வலைதளங்களில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கணக்கு துவங்குவதற்கு முன்னர் பெற்றோரின் ஒப்புதல் தேவை எனவும், இதனை சம்பந்தப்பட்ட வலைதளங்கள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு வெளியிட்ட டிஜிட்டல் தரவு பாதுகாப்பு வரைவு விதிமுறைகளில் கூறப்பட்டு உள்ளது.
இன்றைய இணைய உலகம் இளசுகளை மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு மக்களையும் கட்டிப்போட்டுள்ளது. ஒரு செல்போனில் விரல் நுனியில் அனைத்தையும் தெரிந்துகொள்ள ஆர்வமாய் இருக்கும் நாம், நமக்கு தெரியாமலேயே அடிமையாகி கொண்டு வருகிறோம் என்பதை உணர மறுக்கிறோம்.
குறிப்பாக ஒவ்வொருவரும் குறைந்தது ஏதேனும் ஒரு சமூக வலைதளத்திலாவது உலாவி கொண்டுதான் இருக்கிறோம். குறிப்பாக குழந்தைகளும் கூட சமூக வலைதளத்தில் அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அவர்களும் தனித்தனி அக்கவுண்டை உருவாக்கி, பயன்படுத்தி வருகின்றனர்.
அதிக நேரங்களை சமூக வலைதளத்தில் செலவிடுவதால் குழந்தைகளின் மனநிலை, கல்வி போன்றவை பாதிக்கப்படுகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு ஆஸி.,யில் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த அந்நாடு தடை விதித்தது வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு வரைவு விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது
சமூக வலைதளங்களில் 18 வயதுக்கு உட்பட்டோர் கணக்கு துவங்கும் முன்னர் பெற்றோரின் ஒப்புதல் தேவை. இதனை சம்பந்தப்பட்ட வலைதளங்கள் உறுதி செய்ய வேண்டும்.தனி நபர் தரவுகளை எந்தவொரு வடிவத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் அந்நபரின் ஒப்புதலைப் பெறுவது கட்டாயமாக்கப்படும்.
சேகரிக்கப்பட்ட தனி நபர் தரவுகளை குறிப்பிட்ட தேவைக்கு பயன்படுத்திய பின், அதனை அழித்துவிட வேண்டும் என்று அந்த வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த வரைவு விதிகள் பிப்.,18 ம் தேதிக்கு பிறகு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.